Thursday, December 18, 2008

love ur child-2

ஒவ்வொரு பெற்றோரும் முதலில் செய்ய வேண்டிய விஷயங்கள் நான்கு இருக்கின்றன. முதலில் பணத்தின் மதிப்பை உணர்த்த வேண்டும். அடுத்து, பணத்தைச் சேர்க்கும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும், மூன்றாவதாக உயர்ந்ததாக ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கடைசியாக நிர்ணயித்த இலக்கை நோக்கிய பயணத்துக்கான பாதையை வகுக்கவேண்டும்.

பத்து ரூபாய் நோட்டின் மதிப்பு பத்து ரூபாய்தானே..? இதில் மதிப்பை உணர்த்துவது என்றால் என்ன என்ற கேள்வி வரலாம். மதிப்பு என்பது நாணயத்தின் மதிப்பு அல்ல... அந்த பணத்தை உண்டாக்க எத்தனை சிரமப்பட்டோம் என்பதை உணர வைப்பது. அதைச் சரியாகச் செய்துவிட்டால் பாதி சிக்கல் தீர்ந்துவிடும். உழைப்பின் அருமையை பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்தால், அவர்கள் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு போய் ஜீன்ஸ் வாங்கிக்கொண்டு வரமாட்டார்கள். இதுதான் பணத்தின் மதிப்பை உணர்த்துவது!

குடும்பத்தின் வருமானம் எவ்வளவு... செலவுகள் எவ்வளவு என்ற பட்ஜெட் பிள்ளைகளுக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் நண்பர்களுக்குப் பிறந்தநாள் பார்ட்டி கொடுக்கும் பணத்தில் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு அரிசி வாங்கிப் போடலாம் என்ற யதார்த்தம் புரியும். இதுதான் முதல் படி..!

Love ur child-1

என்ன நண்பர்களே... உங்கள் பிள்ளைகள் என்ன மதிப்பெண் வாங்கினார்கள்? நூறு சதவிகிதம் என்றால் உங்கள் விலாசத்தை உடனே அனுப்பி வையுங்கள்... நீங்கள்தான் அடுத்த அத்தியாயத்துக்கு அனுபவத்தைச் சொல்லப்போகும் ஆசான்!

60%க்கு மேல் எடுத்து முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தீர்கள் என்றால் கொஞ்சம் பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுங்கள்... நூறு வாங்குவார்கள். சில விஷயங்களை நீங்களே கூட பிள்ளைகளுக்கு எதற்கு குடும்பச் சுமை என்று மறைத்திருக்கலாம்... உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தைகள் ஹாஸ்டலில் இருந்தால்கூட முக்கியமான முடிவுகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள்.


முதல் வகுப்புக்குக் கீழே என்றால் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்... பிள்ளைகள் இல்லை, நீங்கள்! வெளிப்படையாகப் பணம் தொடர்பான விஷயங்களைப் பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்களே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்வார்கள்.

பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டிய அடுத்த பாடம், பணத்தின் மீது அவர்களுக்குப் பிடிப்பு வர வைக்கவேண்டும் என்பதுதான்! தூங்கும்போது தலையணைக்கு அடியில் பணக் கட்டுகளை வைத்துக்கொண்டு தூங்கும் அளவுக்கு ஆசையைத் தூண்டவேண்டும் என்று சொல்லவில்லை. பணம் சம்பாதிப்பதன் தேவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.

'டிரேட்' என்றொரு விளையாட்டு இருக்கிறது. குழந்தைகளை அந்த விளையாட்டுக்குப் பழக்கினால் உற்சாகம் தானாகவே பொங்கும். நான்கு பேர் விளையாடினால், ஆளுக்குக் கொஞ்சம் பணத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும். மீதிப் பணத்தை பேங்க்கில் வைத்துவிட வேண்டும். இப்போது தாயக்கட்டைகளை உருட்டி அதில் விழும் எண்களுக்கு ஏற்ப, நம் காய்களை நகர்த்த வேண்டும். அந்தக் காய் எந்தக் கட்டத்தில் நிற்கிறதோ, அந்தக் கட்டத்தை நாம் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

அதில் உள்ள விலையைக் கொடுத்து அதற்கான உரிமையை வாங்கிவிட்டால், அதன்பிறகு அந்தக் கட்டத்துக்கு யார் வந்தாலும் நமக்கு வாடகை கொடுப்பார்கள். வருமானம் கிடைக்கும். ஒரே வண்ணங்களில் நாலைந்து இடங்களை வாங்கிவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் வீடு கட்டலாம். அதற்குத் தனியாக கூடுதல் வாடகை வசூலித்துக் கொள்ளலாம்.

இந்த விளையாட்டு மெதுவாக உள்ளுக்குள் இறங்கிவிட்டால் பணம் பற்றிய சிந்தனை பெருகத் தொடங்கும். 'நான் இத்தனை கட்டங்களை விலைக்கு வாங்கினேன்... இத்தனை வீடுகளைக் கட்டினேன்' என்றெல்லாம் பேசிக்கொள்ளத் தொடங்குவார்கள். அதோடு, எந்தக் கட்டத்தில் வீடு கட்டினால் லாபம் அதிகமாகக் கிடைக்கும்... எந்தக் கட்டத்தை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து, வியர்வை சிந்தி உழைத்த பணத்தைச் செலவழிப்பதற்கு நிகராக திட்டம் போடத் தொடங்குவார்கள். அதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் தன் மகனின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா... 'டி.சி.எஸ்.' நிறுவனத்தின் நூறு பங்குகள்..! அதற்கு சில மாதங்களுக்கு முன் மகளுக்கு பிறந்தநாள் வந்தபோது 'இன்ஃபோசிஸ்' பங்குகளை வாங்கி பரிசளித்தார். குழந்தைகள் இருவரும் தினமும் பேப்பர் வந்தவுடன் தங்கள் பங்குகள் என்ன விலையேறியிருக்கிறது என்பதை ஆர்வமாகப் பார்க்கிறார்கள். நான் அவர்கள் வீட்டுக்குப் போனால் தங்கள் பங்கு உள்ள கம்பெனி பற்றிய தகவல்களை விசாரிக்கிறார்கள்.

''இன்னும் கொஞ்சநாட்கள்தான்... இந்த ருசி பிடித்துவிட்டால் பிறகு தாங்களே முதலீடு பற்றித் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவார்கள்...'' என்று நண்பர் பெருமையோடு சொன்னார்.

உண்மைதான்... நான் அமெரிக்காவில் இருந்த சமயம், அங்கிருந்த நண்பர் தன் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு கம்பெனியின் பங்கை வாங்கிக் கொடுத்தார். அப்போது அதன் மதிப்பு நூறு டாலர். அந்தப் பெண், படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லும்போது அந்தப் பங்குகளை விற்று கல்லூரி ஃபீஸ் கட்டிவிட்டாள். அப்போது அதன் மதிப்பு 36,000 டாலர்! கேக், டிரஸ், பார்ட்டி, சினிமா எல்லாம் ஒருநாள் கொண்டாட்டம்தான்... ஆனால், என் படிப்புக்குத் தேவையான பணத்தை நானே திரட்டிக் கொண்டேன் என்று சொல்வது எத்தனை கம்பீரமாக இருக்கும்! பணத்தைக் காதலிக்கும் மனப்பக்குவம் வந்துட்டால், அது சாத்தியம்தானே!

பிள்ளைகளுக்கு பணத்தின் மீது காதலை உண்டாக்குங்கள்... அவர்கள் ரொம்பவே அக்கறையோடு பணத்தைப் பார்த்துக்கொள்வார்கள். அதற்கு அவர்களோடு கொஞ்சம் ஒட்டுதலாக இருந்து, கற்றுக்கொடுங்கள்... சேமிப்பு பற்றியும் முதலீடு பற்றியும் சின்னச் சின்ன உதாரணங்களோடு விளக்கிச் சொல்லுங்கள். அவர்களுக்குப் பரிசு கொடுக்கும் சூழல் வந்தால் அதைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.

இதோ அடுத்த எக்ஸர்சைஸ்...

இந்தமுறை தேர்வு உங்களுக்குத்தான்..!



இது உங்களுக்கான தேர்வு... ஒட்டுதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நீங்களே மார்க் போட்டு தெரிந்துகொள்ளுங்கள்... இன்னும் சில செய்திகளோடு...

Tuesday, December 16, 2008

சிகரத்தைத் தேடி-5( கல்யாண-ராமன் CEO of'குளோபல் ஸ்காலர் டாட் காம்' )

கடாரம் கொண்ட சோழன்கள் காலம் முடிந்துவிட்டாலும் தமிழன் தனது வெற்றிக் கொடிகளை உலகெங்கும் பறக்க விட்டுக்கொண்டுதான் இருக்கிறான். என்ன, புஜ பலங்களைக் காண்பிக்க வேண்டியதில்லை என்பதால் இப்போது தங்களது மூளை பலத்தைக் காண்பித்து கொடி நாட்டிக்கொண்டிருக்கிறார்கள்! அப்படி உலக அளவில் பெரிய நிறுவனங்களில் உயரிய பொறுப்பை வகிக்கும் தமிழர்களை அடையாளம் காட்டும் முயற்சியாகவே இந்த 'தமிழ் சி.இ.ஓ.' தொடர் ஆரம்பமாகிறது...

மன்னார் கோவில்...

பெயரைச் சொன்னால் சட்டெனத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அப்படி ஒன்றும் பெரிய ஊரல்ல. ஆனால், அந்த ஊரில் விழுந்த விதை ஒன்று பிரமாண்ட விருட்சமாக இன்று விஸ்வரூபம் காட்டிக்கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவிலில் பிறந்த கல்யாணராமன் 'வால்மார்ட்', 'அமேசான்' போன்ற பெரிய பெரிய கம்பெனிகளில் மிக உயரிய பொறுப்புகளை வகித்து, இன்று 'குளோபல் ஸ்காலர் டாட் காம்' எனும் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராகவும் அதன் சி.இ.ஓ&வாகவும் அமெரிக்காவில் பதவி வகித்துவருகிறார்.

உயரத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் கல்யாண-ராமன் வாழ்க்கை ஒரு பாடம்தான். காட்டாற்று வெள்-ளங்கள் பல கடந்து சாதனை படைத்த தனது சரித்திரத்தை நாணயம் விகடன் வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''கிராமத்தில், 'தாயோடு பாசம் போச்சு, தந்தையோடு படிப்பு போச்சு' என்பார்கள். நான் ஒன்பதாவது படிக்-கும்போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்-தது. என் தந்தை எதிர்பாராதவிதமாக இறந்து-போய்விட்டார். தீராத குடிப்பழக்கம் அவரு-டைய உயிரைக் குடித்துவிட்டுத்தான் ஓய்ந்தது. குழந்-தைகள் நாங்கள் ஐந்து பேர். வெளியுலகம் தெரி-யாத, அதிகம் படிக்காத அம்மா... என்ன செய்வ-தென்றே தெரியவில்லை. அப்போதுதான் அம்மா துணிச்சலாக ஒரு முடிவெடுத்தார். 'யாரும் படிப்பை நிறுத்தவேண்டாம். யாரும் வேலைக்குப் போக வேண்டாம். எல்லோரும் படியுங்கள். நான் பார்த்துக்-கொள்கிறேன்' என்று சொல்லி வேலை செய்ய ஆரம்பித்தார். அவருக்குக் கிடைத்த சொற்ப தொகையை வைத்துதான் மொத்தக் குடும்பமே வயிற்றைக் கழுவவேண்டிய நிலை.



பல சமயங்களில் சாப்பிட எதுவுமே இருக்காது. சாப்பாட்டுத் தட்டை விற்று அரிசி வாங்கிச் சாப்-பிட்ட சம்பவங்கள்கூட உண்டு! பள்ளியில் மதிய உணவுத் திட்டம் என ஒன்று இல்லையென்றால் நாங்கள் உயிர் பிழைத்திருப்போமா என்பதுகூட சந்தேகம்தான். மதிய உணவு முடிந்து எல்லோருடைய தட்டையும் கழுவிக் கொடுத்தால் கூடுதலாக ஒரு சாப்பாடு கொடுப்பார்கள். அதைக்கொண்டுபோய் என் சகோதரிக்குக் கொடுப்பேன்.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் விக்கிர-மசிங்கபுரத்தில் உள்ள செயின்ட்மேரிஸ் பள்ளிக்-கூடத்தில்-தான் படித்தேன். ப்ளஸ் டூ முடித்தபோது எனக்கு இரண்டு இடங்களிலிருந்து சீட் கிடைத்தது. ஒன்று திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் சீட். அடுத்தது சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் இன்ஜினீயரிங் சீட். டாக்டராவது என்ற முடிவுடன் நெல்லைக்குக் கிளம்பியபோதுதான் அந்த முடிவை எடுத்தேன்...'' என்று சஸ்பென்ஸோடு நிறுத்திய கல்யாண-ராமன் சிறிய ஆசுவாசத்துக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்.

''அம்மாவிடம் நான் கேட்டேன்... 'அம்மா, நான் திருநெல்வேலியிலேயே பிறந்து, இங்கேயே படித்து, இங்கேயே டாக்டராகி, இங்கேயே வேலை பார்த்து என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா? அல்லது புதிய உலகைப் பார்க்கும் வகையில் சென்னைக்குப் போகட்டுமா' என்றேன். அம்மா கொஞ்சம்கூட தயங்காமல் சொன்னார், 'நீ சென்னைக்கே போ!'

சென்னையில் வந்து இறங்கியபோது எனக்கு யாரை-யும் தெரியாது. நண்பர்கள் கிடையாது, சொந்த பந்தங்கள் எதுவும் கிடையாது. அம்மா அனுப்-பும் பணத்தை வைத்துப் படித்தேன். எலெக்-டிரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு எடுத்-திருந்-தேன். ஒரு வழியாக படிப்பு முடிந்ததும் எனக்கு இரண்டு இடங்களில் வேலை கிடைத்தது. ஒன்று சென்னையில். இன்னொன்று மும்பையில். சென்-னையிலேயே முடங்கிவிடுவதா என்று மும்-பையைத் தேர்ந்தெடுத்தேன்!

மும்பையில் டி.சி.இ. கம்பெனியில் வேலை. மாதம் 2,800 ரூபாய் சம்பளம். மும்பைக்குப் போய்ச் சேர்ந்தபோதும் அங்கே நான் தனியாள்தான். யாரையும் எனக்குத் தெரியாது. முதல் நாள் வேலைக்குப் போனேன். இரண்டாவது நாளும் போனேன். சீஃப் கூப்பிட்டுக் கேட்டார், 'ஏன் இப்படி ஹவாய் செருப்புப் போட்டுக்கொண்டு தின-மும் இரும்புப் பெட்டியையும் தூக்கிக்கொண்டு ஆபீஸ் வருகி

றாய்?' என்று. அவரிடம் எனது நிலையை, குடும்பப் பின்னணியை போல்டாகச் சொன்-னேன். மற்றவர்களது அனுதாபத்தைப் பெறுவ-தல்ல எனது நோக்கம். என் நிலை எதுவோ அதை மறைக்காமல் சொல்லிவிடுவது என் குணம். 'எங்கே தங்கியிருக்கிறாய்?' என்று அவர் கேட்-டதும், 'தாதர் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில்தான் தங்கி-யிருக்கிறேன்' என்று சொன்னேன். அதிர்ந்து போய்-விட்டார் அவர்.

உடனே எனக்கு தங்குவதற்கு ஆபீஸில் ஏற்பாடு செய்து தந்தார்கள். அங்கே சிறிதுகாலம் வேலை பார்த்தபிறகு, 'என்னால் மும்பையில் தாக்குப் பிடிக்க-முடியாது. இங்கே செலவு அதிகமாகிறது. அதனால் என்னை சென்னைக்கோ, பெங்களூருக்கோ மாற்றி-விடுங்கள்' என்று கேட்டேன். அவர்களும் சரி-யென்று பெங்களூருக்கு மாற்றினார்கள்.

பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த சில நாட்-களிலேயே எனக்கு ஒரு சவால். ஒரு வேலை சம்பந்-தமாக தேவைப்பட்ட புரோகிராமை எழுதித் தரமுடியுமா என்று எங்களிடம் கேட்டபோது சாஃப்ட்வேர் பற்றி எதுவுமே தெரியாத நான் தைரியமாக கையை உயர்த்தினேன். அது நிஜமாகவே ஒரு சவால்தான். மூன்றே மாதங்களில் 'சி' லேங்-வேஜைக் கற்றுக்கொண்டு அந்த புரோகிராமை வெற்றி-கரமாக எழுதி முடித்தேன்.

நான் எழுதிய புரோகிராம் நன்றாகவே வேலை செய்தது. என்னுடைய சீஃப் கூப்பிட்டு, 'உன்னை கன்ஃபர்ம் செய்கிறேன் வாழ்த்துக்கள்' என்றார். நான் பதிலுக்கு 'என் வேலையை ராஜினாமா செய்கி-றேன்' என்றேன்!'' இதைச் சொல்லிவிட்டு நம்மையும் ஒரு நிமிடம் உறைய வைத்துவிட்டு தொடர்ந்தார் கல்யாணராமன்.

''சார், 'நான் எழுதிய ஒரு புரோகிராமுக்கே இந்த வரவேற்பு என்றால் அந்தத் துறைக்கு நான் போனால் இன்னும் சாதிக்கமுடியும் வாய்ப்புகளும் அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் நான் சாஃப்ட்வேர் துறைக்குப் போகப்போகிறேன்' என்று சொன்னேன்.

பொதுவாக டாடா நிறுவனத்தில் ஒருவரை அவர்களது இன்னொரு நிறுவனத்துக்கு மாற்ற மாட்டார்கள். ஆனால், எனக்காக அந்த விதியை தளர்த்தி டி.சி.இ&லிருந்து டி.சி.எஸ்&க்கு மாற்றினார்கள். அப்போதுதான் எனக்கு அறிமுகமானார் என் மனைவி விஜயலட்சுமி. என்னைப் போல அல்ல அவர். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தபோதும் என்னை அவர் கரம்பிடிக்கச் சம்

மதித்தார். டி.சி.எஸ்&ஸிலிருந்து ஒரு கம்பெனிக்கு கான்ட்ராக்டில் என்னை லண்டனுக்கு அனுப்பினார்கள். அங்கேதான் எனக்கு ஒரு திருப்புமுனை காத்திருந்தது'' என்றவர் மேலும் தொடர்ந்தார்...

'என்னுடைய வேலை பிடித்துப் போகவும் அந்த கம்பெனி அதிபர் ஒரு நாள் என்னை அழைத்து, 'உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி' என்றவர், முதலில் நல்ல செய்தியைச் சொன்னார்... உன்னை எங்கள் நிறுவனத்திலேயே சேர்த்துக் கொள்கிறோம்... சம்பளம் மாதத்துக்கு லட்ச ரூபாய் என்றார். நான் கனவிலும் நினைத்துப் பார்த்திராத தொகை அது! நல்ல செய்திதானே சொல்கிறார். கெட்ட செய்தி என்ன என்று தெரியாமல் தவித்தேன். அவரே அதையும் சொன்னார்... 'உன்னுடைய இடத்தில் நான் இருந்தால் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்றார்!

'வேண்டாம் இந்த நாட்டில் இருந்தால் ஒரு அளவுக்கு மேலே உன்னை வளர விடமாட்டார்கள். நீ பேசாமல் அமெரிக்கா போய்விடு' என்றவர் நாலைந்து பத்திரிகைகளைத் தூக்கிப்போட்டு இதைப் பார்த்து வேலைக்கு விண்ணப்பம் போடு என்றார். மிரண்டுபோனேன் நான். இப்படியும் மனிதர்களா! 'தெய்வம் மனுஷ்ய ரூபேணே' என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை!

அவர் சொன்னபடியே விண்ணப்பம் போட்டேன். வேலை கிடைத்தது. அதுவும் எங்கே? புகழ்பெற்ற 'வால்மார்ட்' நிறுவனத்தில்! அதுவும் டைரக்டர் ஆஃப் டெக்னாலஜி வேலை. அதிலிருந்து அடுத்தடுத்து உயரங்களைத் தொட ஆரம்பித்தேன்... அடுத்து 'பிளாக்பஸ்டர்' நிறுவனத்துக்குச் சென்றேன். அடுத்து 'டிரக்ஸ்டோர் டாட் காம்' நிறுவனத்தில் சி.இ.ஓ&வாக உயர்ந்தேன். அடுத்து 'அமேசானி'ல் சீனியர் வைஸ் பிரசிடென்ட் பதவி! கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினேன்.


எங்கேயோ பிறந்த நான் இன்று எங்கேயோ இருக்றேன். ஆனால், என் உலகம் வீட்டைச் சுற்றிதான் இருக்கிறது. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துவிட்டேன். இன்று எனது அம்மா சகோதர சகோதரிகள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னவேண்டுமோ அதையெல்லாம் செய்யமுடிகிறது. கஷ்டப்பட்ட காலங்கள் கரையேறிவிட்டது'' என்றவர் தனது தற்போதைய வேலை குறித்தும் அவரது இலக்குகள் குறித்தும் பேசினார்.

''கல்வி சம்பந்தமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அதிகமாக இருக்கிறது. அதற்கு வடிகாலாக வந்து வாய்த்ததுதான் 'குளோபல் ஸ்காலர் டாட் காம்' வாய்ப்பு. ஆன்லைன் டியூட்டரிங் மூலம் உலகமெங்கும் உள்ள மாணவர்களின் தரத்தை உயர்த்தும் ஓர் உன்னதப் பணி. அதனால்தான் மாதம் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த வேலையை விட்டு விட்டு இதில் பங்குதாரராக இணைந்தேன்.

விரைவில் இந்தியாவிலும் இந்நிறுவனத்தை ஆரம்பிக்கப் போகிறோம். வேலை மூலமாக மட்டுமின்றி என் சகோதரர் மூலமாகவும் ஊரில் படிக்கக் கஷ்டப்படும் நூற்றுக்கணக்கானோர்களுக்கு உதவி செய்துவருகிறேன். பழசை மறக்கமுடியுமா என்ன!'' என்றார் கல்யாணராமன் பெருமிதத்-தோடு.

சிகரத்தைத் தேடி-4(வி.பழனிச்சாமி-ஜே.வி. குரூப்)

வெறும் கையால் முழம் போடமுடியாது என்பார்கள். ஆனால் முழம் அல்ல, முழுக் கோபுரத்தையே கட்டி எழுப்பியிருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த வி.பழனிச்சாமி. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவருடைய விறுவிறு வளர்ச்சி ஒரு மேஜிக் போலத்தான் தெரியும். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் அவரது அயராத உழைப்பு அத்தனை சாதாரணமானதல்ல...

திருப்பூருக்கு வேலை தேடிப் போகிறவர்களில் பத்தில் ஆறு பேராவது ஜே.வி. குரூப் நிறுவனத்தின் கதவைத்தான் முதலில் தட்டுகிறார்கள். ஆயிரம் ரூபாயை முதலீடாகப் போட்டு, ஒரு தொழிலை ஆரம்பித்து, அதிலிருந்து ஆண்டுக்கு 200 கோடி ரூபாயை எடுக்கும் அற்புதத்தைச் சாதித்துக் கொண்டிருக்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வி.பழனிச்சாமி.


அனுபவத்தை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்ட பழனிச்சாமியின் வாழ்க்கை கதை முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு பாடம்தான்! விளம்பரம் என்றாலே மைல் தூரம் ஒதுங்கி நிற்கும் அவர், நாணயம் விகடன் வாசகர்களுக்காக, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்காக, நாளைய தொழிலதிபர்களுக்காக தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''நான் பொறந்தது திருப்பூர்லயிருந்து கோவைக்கு போற ரூட்ல இருக்கும் முருகம்பாளையம் கிராமத்துலதான். என்னோட அப்பா விநாயகப்ப கவுண்டர் ரயில்வேயில வொர்க் பண்ணாருங்க! பக்கத்து கிராமமான வஞ்சிபாளையத்தில உள்ள ஸ்கூல்லதான் 8-ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அதுக்கப்புறமா அப்பா வேலை காரணமா திருப்பூருக்கு வந்துட்டோம்.

திருப்பூருக்கு வந்தபின்னாடி மேல படிக்கோணும்ங்கிற நினைப்பைவிட வேலைக்குப் போய் சம்பாதிக்கோணும்ங்கிற ஆசைதாங்க அதிகமா இருந்துச்சு. என்னோட அண்ணன் முத்துசாமி ஏற்கெனவே ஒரு பனியன் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டிருந்தாருங்க. அதைப்பாத்து நானும் ஒரு பனியன் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளம்னு பாத்தா ஒரு நாளைக்கு மூணு ரூபாய்ங்க!

பனியன் கம்பெனியில வேலை பார்த்தாலும், நாம்பளும் எப்படியாவது ஒரு கம்பெனியை ஆரம்பிச்சிப் போடோணும்ங்கிற நெனைப்பு மனசை அரிச்சிக்கிட்டே இருந்துச்சுங்க. அப்பவே முடிவு பண்ணிட்டேன்... ஆரம்பிச்சா பனியன் கம்பெனிதான் ஆரம்பிக்கோணும்னு! கிட்டத்தட்ட நாலு வருஷம் பனியன் கம்பெனியில வேலை பார்த்தேன்.

பணத்தைவிட, படிப்பைவிட, அனுபவம்ங்கிற பாடத்தை படிச்சிருந்தாதான் தான் ஆரம்பிக்கப் போற தொழில்ல ஒருத்தர் ஜெயிக்க முடியும்ங்கிறது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை.

நாலு வருஷ காலம் நல்ல அனுபவம் கிடைச்சபிறகு நானும் அண்ணனும் கூட்டாச் சேந்து சொந்தமா தொழில் தொடங்க முடிவு செஞ்சோம்ங்க. வலப்பையில வெறும் ஆயிரம் ரூபாயை வெச்சுக்கிட்டு பழைய தையல் மெஷின் ஒண்ணை வாங்கினோம். பெரிய ஃபேக்டரிகள்ல வெட்டினது போக கிடைக்கிற 'பிட்' துணிகளை வாங்கி, அதுல அழகழகா டிரஸ் தைச்சு கடைகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சோம். சின்ன அளவுல நடந்த இந்தத் தொழில் மூலமாதான் பிஸினஸ்னா என்னனு தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு.

முதல் முயற்சியில எங்களுக்குக் கிடைச்ச வெற்றி, எங்களை அடுத்தகட்டத்தை நோக்கி நகர வச்சுதுங்க. 1976-ல கொஞ்சம் பெரிய அளவுல ஒரு பனியன் தொழிற்சாலையை ஆரம்பிச்சோம். 'ஜெயவர்மா நிட்டர்ஸ்'னு அதுக்குப் பெயர் வச்சோம். இந்த முறையும் எங்களுக்குக் கிடைச்சது வெற்றிதான்!

வெளிஸ்டேட்டுக்குப் போய் வியாபாரம் செய்யணும்னா இந்தி தெரிஞ்சா நல்லாயிருக்கும். அதனால கொஞ்சம் கொஞ்சமா இந்தி பேச முதல்ல கத்துக்கிட்டேன். அவங்க மொழியில நான் தட்டுத் தடுமாறிப் பேசினாலும் அது அவங்களுக்கு என் மேல பிரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துச்சு. அதனால தொழிலை மத்த மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த முடிஞ்சுச்சு. மெள்ள மெள்ள எங்க நிறுவனமும் திருப்பூர்ல உள்ள முக்கியமான நிறுவனங்கள்ல ஒண்ணா வளர ஆரம்பிச்சுது.

இந்தச் சமயத்துலதான் இன்னொரு விஷயத்தையும் நான் கவனிச்சேங்க. நாங்க தயாரிக்கிற ஒரு பொருளுக்குத் தேவையான முக்கியமான இன்னொரு பொருளை வேற யார்கிட்டயோ வாங்கவேண்டிய கட்டாயத்துல இருக்கோம்ங்கிறதைக் கவனிச்சேன். உதாரணமா, நாங்க ஜட்டி தயாரிக்கிறோம்னா அதுக்கு முக்கியமா தேவைப்படற எலாஸ்டிக்கை வேற யார்கிட்டயோ இருந்துதான் வாங்கிக்கிட்டிருந்தோம். இதனால லாபமும் குறைவாதான் கிடைச்சுது. அதுமட்டுமில்ல, இன்னொருத்தர் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை வேற! ஏன் அதை நாம்பளே தயாரிச்சா என்னன்னு யோசிச்சு அதுக்கான மெஷின்களை வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செஞ்சு நாங்களே எலாஸ்டிக் தயாரிக்க ஆரம்பிச்சோம்.



இந்த மாதிரி நமக்குத் தேவையானதை நாமே தயாரிச்சுக்கிடறதை 'பேக்வேர்டு இன்டக்ரேஷன்'னு சொல்வாங்க. ரிலையன்ஸ் அம்பானி இதைத்தான் செஞ்சார். ஆடை தயாரிக்கிறதுல ஆரம்பிச்சு, பெட்ரோல் சுத்திகரிப்பு வரைக்கும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் தன்னோட கிளைகளைப் பரப்பினதுக்கு முக்கியமான காரணம் இந்த டெக்னிக்தான்! அதுல முதல்படினு எலாஸ்டிக்கை உற்பத்தி செஞ்சதை சொல்லலாம்.

1987-ம் வருஷத்தோட பிற்பகுதியில நானும் என்னோட அண்ணனும் அதுவரைக்கும் செஞ்சு வந்த தொழிலை அவங்கவங்க சுயமா செய்ய ஆரம்பிச்சோம். எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துக்கு தாய் நிறுவனமான 'ஜெயவர்மா'ங்கிறதோட அடையாளமா 'ஜே.வி. டேப்ஸ்'னு என்று பெயர் வச்சு மார்க்கெட்டிங் செஞ்சேன். தொழிலும் நல்லபடியா வளர ஆரம்பிச்சுது. இப்போ 'நிட்டட் எலாஸ்டிக்' தயாரிப்புல இந்தியாவுல எங்க நிறுவனம்தான் முன்னணியில இருக்கு.

1987-ல் பாரீஸில் ஆடை ஏற்றுமதிக்கான ஒரு கண்காட்சி நடந்துச்சு. அதுக்கு நானும் போயிருந்தேன். அங்க போகும்போது கையோட நாங்க டிஸைன் செஞ்ச டிரஸ்கள் சிலதையும் எடுத்துக்கிட்டுப் போயிருந்தேன். கண்காட்சியை முழுக்கச் சுத்திப் பார்த்தபின்னாடி, ஐரோப்பிய நாட்டு மக்கள் என்ன மாதிரியான தரத்துல ஆடைகள் இருக்கோணும்னு எதிர்பார்க்கிறாங்க அப்படிங்கிறதை நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நான் கொண்டுபோயிருந்த டிரஸ்ஸூம் அந்தத் தரத்துக்கு குறையாம இருந்துச்சு. உடனே லண்டன்ல உள்ள சில கடைகளுக்குப் போய் இங்கிருந்து கொண்டுபோன டிரஸ்களைக் காட்டினேன். அவங்களுக்கு அது பிடிச்சுப் போயி, அப்பால அங்கயே ஆர்டர் கொடுத்துட்டாங்க. 1988-ல் ஆரம்பமான எங்களோட ஏற்றுமதி, மூணே வருஷத்துல உச்சத்தை எட்டுச்சு. 91-ம் வருஷம் திருப்பூர்ல பெரிய ஏற்றுமதி கம்பெனியா எங்க கம்பெனி மாறிடிச்சு.

நாங்க உற்பத்தி செய்யற ஆடைகள் தரமானதுனாலும் அதோட சாயத்துக்கு நிறம் மங்கவே மங்காதுனு எங்களால உத்தரவாதம் கொடுக்க முடியாம இருந்துச்சு. அதனால 1989-ல சொந்தமா ஒரு சாயத் தொழிற்சாலை ஆரம்பிச்சேன். இப்போ சாயத்துக்கு எங்களால நூறு சதவிகிதம் கேரன்டி சொல்ல முடியுது.

இப்படி 'பேக்வேர்டு இன்டக்ரேஷ'ன்ல ரெண்டு முக்கியமான விஷயங்களை செஞ்சு முடிச்சுட்டாலும், இன்னும் ஒரு விஷயம் மிச்சமிருந்துச்சு. அது நூல் உற்பத்தி!

97-ம் வருஷம் 'ஜெயவர்மா டெக்ஸ்டைல் மில்ஸ்'னு ஒரு ஆலையை ஆரம்பிச்சேன். இப்போ இன்னொரு நூற்பாலையும் ஆரம்பிச்சிருக்கோம்.

'பேக்வேர்டு இன்டக்ரேஷ'ன்ல இவ்வளவு செஞ்சபிறகும் போதும்னு என்னால இருக்க முடியலை. மில் நடக்கிறதுக்கு மின்சாரம் உயிர்நாடி மாதிரியானது. அதுமட்டுமில்ல மின்சாரத்துக்கான செலவும் ரொம்ப ஜாஸ்தி. அதனால திருநெல்வேலியில் உள்ள முப்பந்தலில் 9 காற்றாலைகளை ஆரம்பிச்சேன். அது மூலமா எனக்கு 7.5 மெகாவாட் மின்சாரம் இப்ப கிடைக்குது'' என்றவர் தனது அடுத்த இலக்குகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

எதிர்காலத்துல இன்னும் என்னென்ன புது தொழில்களை ஆரம்பிக்கலாம், மாற்றுத் தொழில்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்குது இதைப் பத்தியெல்லாம் யோசிச்சுக்கிட்டே இருக்கேன். இயற்கை வழி உற்பத்திப் பொருட்களுக்குத் தேவையும் நல்ல ஊக்கமும் எதிர்காலத்துல கிடைக்கும்ங்கிறது என்னோட எதிர்பார்ப்பு. அதனால இயற்கை வேளாண்மை சம்பந்தமாவும் விஷயங்களை சேகரிச்சுக்கிட்டிருக்கேன்'' என்றவர் தனது நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்களையும் தனது கோட்பாடுகளையும் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

''எங்களோட தொழில்ல நாங்க சிறந்து விளங்கறதுக்கு முக்கியமான காரணங்கள் பலது இருக்கு. அதுல முதலிடம் ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும்தான். என்னோட கம்பெனில திறமை வாய்ந்தவங்களா அமைஞ்சது மிகப்பெரிய கொடுப்பினை.

அடுத்த முக்கியமான காரணம் வங்கியோட இருக்கற நட்பு. 76-ம் வருஷத்துல இருந்து ஒரே வங்கிதான். எக்காரணத்தைக் கொண்டும் நான் மாத்தினதே இல்லை. ஒரு தொழில்ல வெற்றிபெறணும்னு நினைக்கிறவங்க அடிக்கடி வங்கியை மாத்தக்கூடாதுங்கிறது என்னோட கருத்து!

மூணாவது முக்கியமான காரணம், எந்தக் காலத்திலும் தேவைக்கதிகமா கடன் வாங்காதது. புதுசா தொழில் தொடங்குறவங்ககூட தேவைப்படற பணத்துல 50 சதவிகிதத்தை மட்டுமே கடனா வாங்குங்க. உங்க தொழில் சின்னதா இருந்தாலும் பரவாயில்லை, குறைஞ்ச அளவிலேயே கடன் இருக்கிறது நல்லது'' என்று எல்லோரும் ஃபாலோ பண்ணவேண்டிய விஷயத்தைச் சொன்னவர், இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு வந்தார்...

''ஒரு தொழிலை நடத்துறவங்க அவங்க தொழிலை மாதிரியே அவங்களோட உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமா வச்சுக்கோணும். அதேமாதிரி திட்டமிடுறதுலயும் அதிக அக்கறை எடுத்துக்கோணும். அடுத்த அஞ்சு வருஷத்துல செய்யவேண்டியது என்ன? அடுத்த வருஷம் செஞ்சு முடிக்கவேண்டியது என்ன? அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? இன்னைக்குச் செய்ய வேண்டியது என்ன? இதையெல்லாம் பட்டியல் போட்டு, முக்கியமானதுகளுக்கு முன்னுரிமை கொடுத்து குறிச்சு வச்சுக்குவேன். அந்தக் குறிப்பு புத்தகம் எப்பவும் என்கிட்ட இருக்கும். இதையெல்லாம் கடைப்பிடிச்சா... அது நம்ம வெற்றிக்கு நிச்சயமா உதவும். இது என்னோட அனுபவப் பாடம்!''

தன் பிஸினஸ் வெற்றிக்கதையைச் சொல்லி முடிக்கும் பழனிச்சாமிக்கு இப்போது 53 வயது. புதிய புதிய வெற்றிகளை நோக்கி தினம் தினம் முன்னேறிக்கொண்டிருக்கும் பழனிச்சாமி, இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு ரோல் மாடல்தான்.

சிகரத்தைத் தேடி-3(சீதாராமன். CEO of தோஹா வங்கி)

''என்னுடைய வாழ்க்கை குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது பிரயோஜனமா இருக்கும்னா ஒளிவுமறைவு இல்லாமல் அதைச் சத்தம்போட்டுச் சொல்றதில் எனக்கு எந்த வெட்கமும் கிடையாது...'' என்று கம்பீரமாக நிமிர்ந்தபடி சொல்கிறார் சீதாராமன். கண்ணை உறுத்தாத கறுப்பு வண்ண கோட், சூட்டில் இருந்த சீதாராமன், பார்ட்டிகளின்போது அணியக் கூடிய கழுத்தை இறுக்கும் 'பவ்' டை அணிந்திருந்தார்.

''யெஸ்... வாழ்க்கையை நான் கொண்டாட்டமாத்தான் பார்க்கிறேன்... அதனால்

தான் எப்பவுமே பார்ட்டிக்கான டிரஸ்தான் போடுறேன். ரொம்ப அஃபீஷியலான கோட், சூட், நீளமான டை எல்லாம் நான் போடுறதில்லை'' என்று தான் அணியும் உடைக்குள் கூட ஒரு தத்துவத்தை ஒளித்து வைத்திருக்கிறார்.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சாஃப்ட்வேர் போன்ற துறைகளில்தான் தமிழர்கள் கொடிநாட்டுவார்கள் என்று நினைக்க வேண்டாம். வளைகுடா நாடு ஒன்றின் முக்கியமான வங்கியான தோஹா வங்கியின் தலைமைப் பதவிக்குக் கூட ஒரு தமிழர் வரமுடியும் என்பதை நிருபித்திருக்கிறார் சீதாராமன். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.


''வறுமை எனக்குக் கிடைச்ச வரம். தஞ்சாவூருக்குப் பக்கத்தில் உள்ள தரங்கம்பாடியில் பிறந்த எனக்கு, பத்து வயதுவரை எந்தச் சிரமமும் இல்லை. தமிழ்நாடு அரசியலையே புரட்டிப் போட்ட இந்தி எதிர்ப்பு என் குடும்பத்தையும் சிதைச்சுடுச்சு. சமஸ்கிருதம் மற்றும் இந்தி கற்றுக் கொடுக்கும் வேலை பார்த்த என் அப்பாவுக்கு இந்தி எதிர்ப்பால் வேலை பறிபோனது!

இந்தி தவிர, வேறெதையும் சிந்திச்சே பார்க்காத என் தந்தை, வேலை தேடி மும்பைக்குப் போனார். நான்கு பிள்ளைகளையும் றெக்கைக்குள் குஞ்சுகளை அடைகாக்கும் கோழிபோல என் தாய் தாங்கிக் கொண்டார். என் தந்தை அனுப்பும் சொற்ப பணத்தில் எங்களை சொர்க்கத்தில் வைத்துப் பார்த்துக்கொண்டார் என் தாயார்.

அப்பாவால் எவ்வளவுதான் அனுப்பிவிட முடியும்! அம்மாவையும் சேர்த்து வீட்டில் ஐந்து வயிறுகள்... அவருகிட்டே இருந்தது ரெண்டு கைகள்தானே... நானும் அண்ணனும் மயிலாடுதுறையில் உள்ள ஹாஸ்டலில் போய் தங்கிப் படிச்சோம். இலவச தங்குமிடம், சாப்பாடுன்னு எங்க ரெண்டு பேர் செலவாவது குறையுமே!

எங்கம்மா எனக்குச் சொல்லித் தந்தது ஒரே ஒரு விஷயம்தான். 'என்ன ஆனாலும் சரி, படிப்புதான் நமக்கு துணை நிக்கும். அதை மட்டும் மனசிலே வெச்சுக்கோ'னு அன்னிக்கு அவங்க சொன்னதை இன்னிக்கு அனுபவப்பூர்வமா உணர்றேன். எனக்குக் கீழே அமெரிக்காகாரர், இங்கிலாந்துகாரர், ஜப்பான்காரர்னு பல நாட்டு ஆட்கள் வேலை பார்க்கிறாங்கன்னா அதுக்குக் கை கொடுத்தது என் படிப்புதானே!'' என்று சொல்லும் சீதாராமனின் தமிழில் தஞ்சாவூர் மணக்கிறது.

''படிக்கிற காலத்தில் வேற கவனம் எதுவுமில்லை. இருந்தாலும் அதுவும் படிப்புக்கு, குடும்பத்துக்கு உதவியா இருக்குமான்னுதான் பார்ப்பேன். புது புத்தகங்கள் வாங்க வசதி கிடையாது. முந்தின வருஷம் முடிச்சவங்ககிட்டே இருந்து புத்தகங்களை வாங்குவேன். அதுக்கும் பணம் கொடுக்க வழிகிடையாது. அவங்களுக்கு கணக்கு, இங்கிலீஷ் மாதிரி சப்ஜெக்ட்டுகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பேன். என்னைவிட பெரிய கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுத்து காசு சேர்த்து படிப்புச் செலவுகளைச் சமாளிப்பேன்.

இன்னிக்கு உலகம் முழுக்க செமினார், கான்ஃபரன்ஸூனு பேசிக்கிட்டிருக்கேன். அதுக்கான விதை பள்ளிக்கூட காலத்திலேயே விழுந்திடுச்சு. திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் 'சூரியகாந்தி'னு ஒரு நிகழ்ச்சி. அதுல பேசினா 55 ரூபாய் பணம் கிடைக்கும். அதுக்காக அடிக்கடி ஓடிப்போய் பேசிட்டு வருவேன். அந்தக் காசு குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் உதவியா இருக்குமே!'' என்று சீதாராமன் சொல்லும்போது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தாயின் கண்களில் ஈரம் கசிகிறது.

மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பு, தஞ்சாவூரில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.காம்-னு படிப்பு முழுக்கவே அரசாங்க உதவித் தொகையில்தான். கல்லூரியையும் முடிச்சுட்டு சி.ஏ. படிச்சேன். முடிச்ச கையோடு அப்பாவுக்குத் துணையா மும்பைக்கு போயிட்டேன். அங்கே 'பிரைஸ் வாட்டர் ஹவுஸ்'னு ஒரு ஆடிட் கம்பெனியில் வேலையில் சேர்ந்தேன். அப்போதான் மொத்தக் குடும்பமும் ஒரே இடத்தில் இருந்தா செலவு கட்டுக்குள் இருக்கும்னு தோணுச்சு. எல்லோரையும் மும்பைக்குக் கூட்டிட்டுப் போயிட்டோம். அந்தக் காலகட்டத்தில்தான் தங்கைக்கு திருமணம் முடிச்சு வெச்சோம்.



ஆனால், ரூபாயில் சம்பாதிச்சு சேர்த்து எங்க குடும்பத்தை மேலே கொண்டு வர ரொம்ப காலமாகும்னு புரிஞ்சது. வெளிநாட்டுக்குப் போனா நல்ல சம்பளம் கிடைக்குமேனு மஸ்கட்டில் ஒரு ஆடிட்டிங் கம்பெனிக்கு ஓடினேன். அதன்பிறகு வாழ்க்கையில் எல்லாமே வசந்த காலம்தான். அடுத்தடுத்து சில வங்கிகளில் வேலை பார்த்து இப்போது தோஹாவில் வந்து உட்கார்ந்திருக்கேன்'' என்ற சீதாராமன், தன் மனைவி குழந்தைகளைப் பற்றிச் சொன்னார்.

''என் குடும்பச் சூழல் தெரிஞ்ச பொண்ணா வேண்டும்னு நினைச்சேன். அதுக்கு ஏத்தமாதிரி அமைஞ்சாங்க. திருக்காட்டுபள்ளிதான் சொந்த ஊருன்னாலும் மனைவி பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பைதான். ரெண்டு பொண்ணுங்க... பெரியவள் கத்தாரில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். சின்னவள் பத்தாவது படிக்கிறார். 'இவ்ளோ கஷ்டப்பட்டியாப்பா'னு கதை போல என் வாழ்க்கையைக் கேட்டுப்பாங்க. அவங்க சொன்ன வார்த்தைகள்தான் நான் முதலில் சொன்னது, 'வறுமை ஒரு வரம்!'

எங்கப்பா மும்பையில் இருந்த காலத்தில் ஊருக்கு அவரால் அனுப்ப முடிந்த பணம் சில நூறுகள்தான். ஆனால், இன்றைக்கு எங்கள் குடும்ப வருமானம் எங்கேயோ இருக்குது. காலமாற்றங்கறதை இப்படித்தான் நான் பார்க்கிறேன். எங்களுக்காக தங்களைக் கரைச்சுக்கிட்டு வாழ்ந்த அப்பாவையும் அம்மாவையும் நாங்க பக்கத்துலயே வெச்சுக்கணும்னு ஆசைப்படுறோம். அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் காலமாகிட்டாரு. அம்மா அண்ணனோடு மும்பையில் கொஞ்சநாள், தம்பியோடு சென்னையில் கொஞ்சநாள், என்னோடு கொஞ்சநாள்னு பாசத்தைப் பகிர்ந்து கொடுத்துக்கிட்டிருக்காங்க. இதுதான் என் வாழ்க்கைச் சுருக்கம்'' என்று தெளிந்த நீரோடையைக் கடக்க கைப்பிடித்துக் கூட்டிச் செல்வதுபோலச் சொல்லிக்கொண்டே போனார்.

மிக மிக உயரத்துக்குப் போய்விட்டாலும் சீதாராமன் வேர்களை மறந்துவிடவில்லை.

''நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு உதவுறதுக்கு அறக்கட்டளை மூலமா உதவிகள் பண்றேன். கண்பார்வை தெரியாத குழந்தைகள் 40 பேருக்கு உதவி செய்றேன். உதவுறேன்னு சொன்னா போதும்... யாருக்கு எவ்வளவுனு பட்டியல் வேண்டாம்... அது தேவையில்லை. என்னைப் பொறுத்த அளவில் எங்கேயோ ஒரு மூலையில் எதோ ஒரு சீதாராமன் வளர வழியில்லாமல் திகைத்து நின்னுடக் கூடாது. அவன் என்னைத் தேடி வரணும்னு இல்லை. நான் அவனைப் போய்ச் சேரணும்னுதான் யோசிக்கிறேன். இன்னும் சொல்லப் போனா, இந்தியாவைவிட மிகவும் தேவைப்படுற இன்னும் சில நாடுகளுக்கு நான் அதிகமா உதவி பண்றேன்'' என்றார்.

புறப்படும் நேரத்தில் சீதாராமன் சொன்ன வார்த்தைகள் உறுதியான குரலில் கூடவே வந்தன.

''இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உலகில் பல இடங்களில் உயர்ந்த நிலைகளில் இருக்காங்கனு சொன்னா, அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றது கடின உழைப்புதான். அவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கற அனுபவங்கள்தான் அவர்கள் முக்கியமான பல முடிவுகளை எடுக்கறதுக்கு உதவி செய்யுது. இன்னிக்கு உலக அளவில் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை நிர்வகிக்கும்போது பல முடிவுகளை எடுக்க நான் துணைக்கு அழைப்பது வறுமையான காலத்தில் என் அம்மா எடுத்த முடிவுகளைத்தான்! எல்லோருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கும். அதை கடைசிவரையில் மறக்காமல் இருக்கவேண்டும். பிறருக்கு மறைக்காமல் சொல்லவும் வேண்டும்''

சீதாராமன் சொல்லியிருக்கிறார்... பலருக்குத் தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு!

சிகரத்தைத் தேடி-2

பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சரியம் என்று கடலைப் பற்றிச் சொல்வார்கள். ஆனால், அதைவிட பெரிய ஆச்சரியம் தருவதாக இருக்கிறது கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கான படிப்புகள்!

''கப்பல் என்பது மிதக்கும் பொக்கிஷம் மாதிரி. எந்தத் துறையிலும் இல்லாத வாய்ப்பும், சம்பளமும் கப்பல் வேலையில் இருக்கிறது'' என்று உற்சாக வார்த்தைகளோடு பேச ஆரம்பித்தார் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பி.விஜயன்.

''தேசிய கடல்சார் மையத்தில் பி.எஸ்ஸி., படிப்புக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர்கள் சேரலாம். ஒரு சமயத்தில் 123 பேர் சேரமுடியும். அத்தனை பேருக்குமே படிப்பின் முடிவில் வேலை உறுதி என்பதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது'' என்றவர், கடல்சார் படிப்புகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அடங்கிய ஓர் அட்டவணையையும் கொடுத்தார்.

''இந்தப் படிப்புகள் தவிர, இந்த ஆண்டு முதல் இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பு படித்திருப்பவர்களும் சேரும் வகையில் 6 மாதப் படிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம். அதேபோல், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஒருவருடப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக கப்பல் பணிகளில் சேரலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு 'கிராஜுவேட் மரைன் இன்ஜினீயரிங்' பட்டம் வழங்கப்படும். இவர்கள் முதன்மை இன்ஜினீயராக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள். இவைதவிர, இந்த ஆண்டு கடல்சார் பல்கலைக்கழகத்தில் எட்டுத் துறைகளை புதிதாக உருவாக்க உள்ளோம்'' என்றவர்
''பொதுவாக மக்கள் மத்தியில் 'கப்பலில் வேலையா... அது ரொம்ப ரிஸ்க்கான விஷயமாச்சே...'னு ஒரு கருத்து இருக்கு. நிச்சயமாக சென்னை டிராஃபிக்கில் வண்டி ஓட்டுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ரிஸ்க் இல்லை'' என்றார் வெடிச் சிரிப்போடு!

உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான எ.பி.முல்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிஜார்னே ஃபோல்டேகர், ''இப்போது கடல்பரப்பில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. அதனால் கப்பலில் பணிபுரிவதில் உள்ள ரிஸ்க் பெருமளவு குறைந்திருக்கிறது. கொஞ்சம் ஸ்மார்ட்டாகவும், திறமையாகவும் செயல்படுபவராக இருந்தால் பதவி உயர்வும், சம்பள உயர்வும் வந்துகொண்டே இருக்கும்'' என்றார்.



வேலை தரும் படிப்பு

கடலிலும் வாய்ப்பு... கரையிலும் வாய்ப்பு!




பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சரியம் என்று கடலைப் பற்றிச் சொல்வார்கள். ஆனால், அதைவிட பெரிய ஆச்சரியம் தருவதாக இருக்கிறது கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கான படிப்புகள்!

''கப்பல் என்பது மிதக்கும் பொக்கிஷம் மாதிரி. எந்தத் துறையிலும் இல்லாத வாய்ப்பும், சம்பளமும் கப்பல் வேலையில் இருக்கிறது'' என்று உற்சாக வார்த்தைகளோடு பேச ஆரம்பித்தார் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பி.விஜயன்.

''தேசிய கடல்சார் மையத்தில் பி.எஸ்ஸி., படிப்புக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர்கள் சேரலாம். ஒரு சமயத்தில் 123 பேர் சேரமுடியும். அத்தனை பேருக்குமே படிப்பின் முடிவில் வேலை உறுதி என்பதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது'' என்றவர், கடல்சார் படிப்புகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அடங்கிய ஓர் அட்டவணையையும் கொடுத்தார்.

''இந்தப் படிப்புகள் தவிர, இந்த ஆண்டு முதல் இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பு படித்திருப்பவர்களும் சேரும் வகையில் 6 மாதப் படிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம். அதேபோல், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஒருவருடப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக கப்பல் பணிகளில் சேரலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு 'கிராஜுவேட் மரைன் இன்ஜினீயரிங்' பட்டம் வழங்கப்படும். இவர்கள் முதன்மை இன்ஜினீயராக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள். இவைதவிர, இந்த ஆண்டு கடல்சார் பல்கலைக்கழகத்தில் எட்டுத் துறைகளை புதிதாக உருவாக்க உள்ளோம்'' என்றவர்,



''பொதுவாக மக்கள் மத்தியில் 'கப்பலில் வேலையா... அது ரொம்ப ரிஸ்க்கான விஷயமாச்சே...'னு ஒரு கருத்து இருக்கு. நிச்சயமாக சென்னை டிராஃபிக்கில் வண்டி ஓட்டுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ரிஸ்க் இல்லை'' என்றார் வெடிச் சிரிப்போடு!

உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான எ.பி.முல்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிஜார்னே ஃபோல்டேகர், ''இப்போது கடல்பரப்பில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. அதனால் கப்பலில் பணிபுரிவதில் உள்ள ரிஸ்க் பெருமளவு குறைந்திருக்கிறது. கொஞ்சம் ஸ்மார்ட்டாகவும், திறமையாகவும் செயல்படுபவராக இருந்தால் பதவி உயர்வும், சம்பள உயர்வும் வந்துகொண்டே இருக்கும்'' என்றார்.



'அகாடமி ஆஃப் மேரிடைம் எஜுகேஷன் அண்ட் டிரைனிங்' (AMET) நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் தலைவர் ராமச்சந்திரன் பேசும்போது, ''துறைமுகக் கட்டுமானப் பொறியியல், எண்ணெய் வளங்களைக் கடலில் கண்டறிவது தொடர்பான பெட்ரோல் இன்ஜினீயரிங் படிப்புகளும்கூட இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றன. அதனால், கடல்சார் படிப்பு என்பதற்கான எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது'' என்றார்

இதே நிறுவனத்தின் மரைன் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் வேணுகோபால், ''இந்தத் துறையைப் பொறுத்தவரையில் 21 வயதில் வேலைக்குச் சேர்பவர்கள் 30 வயது வரை நன்கு சம்பாதித்துவிட்டு, கப்பல் பணியில் இருந்து விடுபட்டு துறைமுகம் சார்ந்த பணிக்கு வந்துவிடலாம். இப்போது மின்துறை முக்கியத்துவம் பெற்று வருவதால், அந்தத் துறையில் தெர்மல் பவர் பிளான்ட் மற்றும் இதர மின் தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளுக்கு கப்பல் துறையில் வேலை பார்த்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது. அதேபோல நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகப் பணிகளிலும் எளிதாக வேலைக்குச் சேரமுடியும். மரைன் இன்ஜினீயரிங் படித்தால், கப்பலில் இருக்கும்போதும் வாய்ப்பு; கரைக்கு வந்தாலும் வாய்ப்பு'' என்றார்.

ஹாங்காங்கைச் சேர்ந்த 'வாலெம்' கப்பல் நிறுவனத்தின் துணைத்தலைவரும் கேப்டனுமான ஜி.ராமசாமி, ''உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் துறைமுகம் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இவர்கள் நிலையை இந்தியத் துறைமுகங்கள் அடையவேண்டும். அதை நோக்கித்தான் மத்திய அரசு தனியார் நிறுவனங்களோடு கைகோத்துச் சென்றுகொண்டிருக்கிறது. வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறை என்பதால் வேலைவாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது'' என்றார்.
கப்பல் பணியில் இருந்து விடுபட்டு வருகிறவர்களுக்கு மரைன் கல்லூரிகளில் ஆசிரியர் பணி, துறைமுகங்களில் ஷிப்பிங் நிறுவனங்களில் சர்வேயர் பணி, பயிற்சியாளர் பணி, டெக்னிக்கல் சூப்பிரடென்டன்ட் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. அதனால், இந்தப் படிப்பைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.

என்ன, கடலில் குதிக்கத் தயாராகிவிட்டீர்களா!

சிகரத்தைத் தேடி-1

விமான நிலையத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கவேண்டும்... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மெட்ரோ கூட்டத்துக்கு வந்து செல்ல வாய்ப்பான இடத்தில் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு ஐ.டி. நிறுவனத்துக்கு அடிப்படைத் தேவையாகச் சொல்வார்கள். ஆனால், அதெல்லாம் சும்மா என்று சொல்வதுபோல பாண்டிச்சேரியில் உட்கார்ந்துகொண்டு வெற்றிகரமாக ஐ.டி. கம்பெனியை நடத்திக்கொண்டிருக்கிறார் ராம் சுப்பிரமண்யா! பாண்டிச்சேரியில் இவர் நடத்தும் 'இன்டெக்ரா சாஃப்ட்வேர்' நிறுவனம், இ-பப்ளிஷிங் துறையில் உலக அளவில் 5-வது இடத்தைப் பிடித்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 5 ஊழியர்களுடன் ஆரம்பமான இந்த நிறுவனம், இன்று 1,100 ஊழியர்களுடன் 24 மணி நேரமும் ஆண்டு முழுக்க இயங்கி வருகிறது.

''தொழிலில் ஜெயிக்கத் தேவையான இடம் மூளைதான் சார்... அது சுறுசுறுப்பாக இருந்தால் எங்கே இருந்தாலும் ஜெயிக்கலாம்...'' என்று சின்னச் சிரிப்போடு சொன்ன ராமைப் பார்த்தால், ஜீரோவை உடைத்துக்கொண்டு சீறிக் கிளம்பிய ஹீரோவாகத்தான் தெரிகிறார்.
தன்னுடைய அட்சரத்தில் இருந்து ஆரம்பித்தார் ராம்.

''நான் பிறந்தது மதுராந்தகத்தில்... பாரம்பரியம் மிக்க குடும்பத்தில்..! ஊரார் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்கத்தில் என் பாட்டனார் 125 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய பள்ளியில்தான் நானும் ஆறாவது வரை படித்தேன். அதன்பிறகு, திருச்சியில் உள்ள 'ராமகிருஷ்ணா தபோவனம்' நடத்தும் பள்ளி, மதுரையில் சோழவந்தானுக்கு அருகில் உள்ள 'விவேகானந்தா கல்லூரி' என படிப்பு வளர்ந்தது. பின்பு 'அண்ணா பல்கலைக்கழக'த்தில் 'மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்' படித்தேன்.

அப்போதே சொந்தத் தொழில்தான் என் மனதில் இருந்தது. ஆனால், தொழிலுக்கு முன்அனுபவம் முக்கியம் என்பதால், ஒரு வேலையில் சேர்ந்தேன். அடிப்படை வேலைகள் முதல் நிர்வாகம் வரை அத்தனை விஷயங்களையும் அங்கு தெரிந்து கொண்டேன். படிப்படியாக புரமோஷன் என்னைத் தேடி வந்தது. பெங்களூருவில் ஒரு 'க்ரீன்ஃபீல்ட்' நிறுவனத்தைத் தொடங்க கம்பெனி சார்பில் என்னை அனுப்பினார்கள். 'க்ரீன்ஃபீல்ட்' நிறுவனம் என்பது லைசென்ஸ் பெறுவதில் ஆரம்பித்து, கட்டடம் எழுப்பி, ஆட்களைத் திரட்டி, வெற்றிகரமாக இயங்க வைப்பது. அந்த ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்தேன்.

கம்பெனிக்கு வேலை சிறப்பாக முடிந்த சந்தோஷம்... எனக்கு ஒரு தொழிலை நேர்த்தியுடன் தொடங்கும் அளவுக்கு திறமை இருப்பதைச் சோதித்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பு அது. அதையடுத்து பாண்டிச்சேரியில் இன்னொரு 'க்ரீன்ஃபீல்ட்' நிறுவனத்தைத் தொடங்க என்னை அனுப்பினார்கள். அதையும் செய்து முடித்தபோது, முழுமையான மன தைரியமும் ஒன்பது ஆண்டு வேலை அனுபவமும் என் கணக்கில் சேமிப்பாக நின்றது. கூடவே சொந்தத் தொழிலுக்குத் தோள்கொடுக்க முழுமனதோடு காத்திருந்தார் மனைவி அனுராதா.

என்ன தொழில் தொடங்கலாம் என்று விவாதித்தோம். குடும்பத் தொழிலான விவசாயம் தொடர்பான தொழிலா, பொறியியல் நிறுவனமா, அல்லது ஐ.டி. கம்பெனியா என்ற விவாதத்தின் முடிவில், வேகமான வளர்ச்சிக்கு ஐ.டி. கம்பெனிதான் சிறந்தது என்று தீர்மானமானது.
சரியான துறையைத் தேர்வு செய்துவிட்டாலே பாதி வெற்றி உறுதி என்பதை அதன்பின் அனுபவத்தில் உணர்ந்தேன். பாண்டிச்சேரியில் முதல் முதலாக கம்ப்யூட்டர் வாங்கி தட்டச்சு செய்துகொடுக்கும் (டி.டி.பி.) வேலையைச் செய்ய ஆரம்பித்தோம். அடுத்த சில மாதங்களிலேயே ஸ்கேனிங், பைண்டிங் என்று வேகமாக வளர ஆரம்பித்தோம். அந்தச் சமயத்தில் 'பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்' அஞ்சல்வழிக் கல்வியை ஆரம்பித்தது. குறுகியகாலத்தில் நிறைய புத்தகங்களைத் தயார் செய்யவேண்டிய அவசரம் அவர்களுக்கு. ஆனால், எங்களுக்கோ அது ஒரு வரம்! எங்களால் முடிந்த அளவுக்கு இரவு, பகல் என்று பார்க்காமல் அவர்கள் சொன்ன வேலையைத் தரமாகச் செய்துகொடுத்தோம். நமக்கான வாய்ப்புகள் எப்போதும் எப்படியும் வரலாம். வரும்போது அதை கச்சிதமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் சமயத்தில் ஒரு சிங்கப்பூர் நிறுவனம் ஆர்டர் ஒன்றுக்காக ஆள் தேடுவதை அறிந்தோம். எங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி, அவர்களைச் சம்மதிக்க வைக்க பெரும் சிரமம் எடுத்துக் கொண்டோம். எங்கள் முயற்சி வீண்போகவில்லை. தனது புத்தகத்தைத் தயார் செய்துகொடுக்கும் வேலையை எங்களிடம் கொடுத்தது. அந்த ஆர்டரை மிகச் சிறப்பாகச் செய்துகொடுத்ததன் விளைவு, இன்றுவரை அந்த நிறுவனம் எங்களை விட்டு வேறு எங்கும் போகவில்லை! ஒரு வாடிக்கையாளர் நம்மிடம் வந்துவிட்டால், அவர்கள் நம்மைவிட்டு வேறு எங்கும் சென்றுவிடக்கூடாது. அதுதான் தொழிலில் முக்கியம்!
இந்தக் காலகட்டத்தில் இன்டர்நெட் என்பது எங்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. 'டயல் அப்' முறையில்தான் வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். இந்த முறையில் எங்களுக்கு பல விதமான தொந்தரவுகள். அவசரமான நேரத்தில் 'டயல் அப்' மூலம் இன்டர்நெட்டுக்குள் போக வேண்டுமென்றால் லைன் கிடைக்காது. இதற்காக சிங்கப்பூரில் இருக்கும் இன்னொரு அலுவலகத்தின் இன்டர்நெட்டுடன் எங்கள் லைனை இணைத்து, இ-மெயிலை அங்கு டவுன் லோட் செய்து படிப்போம்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வெளிநாட்டுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் 'ஐ.எஸ்.டி.என்.' இணைப்புதான் என்பதை உணர்ந்து, பாண்டிச்சேரி தொலைபேசித் துறையை அணுகினோம். அவர்களால் எங்கள் தேவையையே புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படி ஒரு விண்ணப்பத்தோடு சென்ற முதல் ஆள் நாங்கள்தான்! பிறகு, சென்னைக்குச் சென்று போராடி அந்த இணைப்புக்கான ஏற்பாட்டைச் செய்து, பாண்டிச்சேரி தொலைபேசித்துறை மூலம் அதைப் பெற ஓராண்டு காலம் பிடித்தது.

ஆனால், பிரச்னைக்கான தீர்வு ஒன்றுதான் என்று தெரிந்துவிட்டால், அது கிடைக்கும்வரை பொறுமையாக இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்.

2000-த்துக்குப் பிறகு எங்களைத் தேடி ஆர்டர்கள் வந்து குவிய ஆரம்பித்தன. ஓரளவுக்குப் பெரிய நிறுவனமாக ஆகிவிட்டோம். முதலில் ஒரு சிறிய வீட்டில் தொடங்கிய எங்கள் அலுவலகம், மூன்று வீதிகளில் உள்ள அத்தனை வீடுகளிலும் நடக்கும் அளவுக்கு வளர ஆரம்பித்தது. வளர்ச்சியின் வேகம் அதிகமானபோது 'சென்னைக்குப் போய்விட்டால் இன்னும் வேகமாக முன்னேறமுடியும்' என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், நான் 'டயர்-2 சிட்டி' என்று அழைக்கப்படுகிற பாண்டிச்சேரியிலேயே எங்கள் நிறுவனத்தை நடத்துவது என்று முடிவெடுத்தேன்!

பெரிய நகரங்கள் அளவுக்குப் போட்டி இருக்காது. உற்பத்திச் செலவு குறைவாக இருக்கும் என்றெல்லாம் தொழில் ரீதியான லாபங்கள் இருந்தாலும், சின்ன ஊரில் இருந்துகொண்டு சாதிப்பது என்ற சவாலை நான் விரும்பினேன். அதுதான் முக்கியமான காரணம். நமக்கான சவால்களை நாமே உருவாக்கிக்கொண்டு ஜெயிக்கவேண்டும். சவால்கள் இல்லாத தொழில் சுவாரஸ்யமானதாக இருக்காது.

பாண்டியிலேயே எங்கள் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தபிறகு அதில் உள்ள பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதல் சிக்கல், எங்களுக்கு ஆர்டர் கொடுக்க நினைக்கும் நிறுவனங்களின் உயரதிகாரிகள் எங்கள் நிறுவனத்துக்கு வருவதில் காட்டிய தயக்கம். 'சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரில் வெகுதூரம் வரவேண்டுமா..? இந்தியாவில் சாலைப் பயணம் ரிஸ்க்கான விஷயமாச்சே...' என்றெல்லாம் தயங்கினார்கள்! ஆனால், பேசிச் சம்மதிக்கவைத்து, வசதியான வெளிநாட்டு கார்களை வாடகைக்குப் பிடித்து அவர்களை அழைத்து வந்தோம். என் நிறுவனத்தை ஒருமுறை நேரில் பார்த்தால் எங்கள் மீதான நம்பிக்கை கூடும் என்று நான் நம்பினேன். அது நடக்கவும் செய்தது.

அடுத்த சிக்கல், எங்கள் நிறுவனத்துக்கான ஊழியர்களைத் தேடுவதில் வந்தது. வேறு நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்களை வைத்து வேலை வாங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. அதனால் எங்கள் ஊழியர்களை நாங்களே உருவாக்குவது என்று முடிவெடுத்தோம். திறமையானவர்களைத் தேடி, பயிற்சி கொடுத்து, எங்கள் நிறுவனத்தில் பணி அமர்த்தினோம். சிக்கல்களைக் கண்டு பயந்துவிடாமல், அதை எப்படி எதிர்கொள்வது என்ற வழியைத் தேடினால் தீர்வு எளிதாகக் கிடைக்கும்.

கடந்த 14 ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததன் விளைவு, உலக அளவில் பதிப்புத் துறையில் முதல் 10 இடத்தைப் பெற்றுள்ள புத்தக நிறுவனங்கள் எங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

எங்கள் ஊழியர்களிடம் நாங்கள் இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் வலியுறுத்துகிறோம். ஒன்று, தரம். மற்றொன்று, குறித்த நேரத்தில் வேலையை முடித்துக்கொடுப்பது. இ-பப்ளிஷிங் துறையில் நாங்கள் உலக அளவில் 5-வது இடத்தில் தொடர்ந்து இருக்கக் காரணம் இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே. நாங்கள் செய்துகொடுக்கும் வேலையில் ஒரு சிறிய தவறுகூட இருந்துவிடக்கூடாது என்பதில் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் கவனமாக இருக்கிறோம். தவறுகள் மனிதக் கண்களுக்குத் தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக பல சாஃப்ட்வேர்களையும் உருவாக்கி இருக்கிறோம்

அடுத்து, நேரந்தவறாமை. இதற்குத் திட்டமிடுதல் மிகவும் அவசியம். ஒரு வேலை என்றைக்கு முடித்துக் கொடுக்கவேண்டுமோ, அதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடித்துக் கொடுக்கிற மாதிரி திட்டமிடுகிறோம். இதனால் எதிர்பாராமல் ஏதாவது ஒன்று நடந்தாலும் குறித்த நேரத்தில் எங்களால் அந்த வேலையைச் செய்து கொடுத்துவிட முடிகிறது. தரத்திலும் நேரத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் உறுதியாக இருந்தால் ஜெயிப்பது நிச்சயம். நேரம் தவறினால் நல்ல எதிர்காலத்தைத் தவற விட்டுவிடுவோம்.

இப்போது எங்கள் நிறுவனம் 'இ-பப்ளிஷிங்'கில் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது. 2013-ல் எங்கள் நிறுவனம்தான் 'இ-பப்ளிஷிங்' துறையில் முதல் இடத்தில் இருக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம். அடுத்த ஆண்டில் 100 கோடி ரூபாய்க்குக் குறையாமல் எங்கள் டேர்ன் ஓவர் இருக்கவேண்டும் என்பது எங்கள் இலக்கு. அமெரிக்காவில் உள்ள ஒரு 'இ-பப்ளிஷிங்' நிறுவனத்தை நாங்கள் ஏற்கெனவே வாங்கிவிட்டோம்! கூடிய விரைவில் இன்னுமொரு நிறுவனத்தையும் வாங்கப் போகிறோம். இதுநாள் வரை பாண்டிச்சேரியில் மட்டுமே இயங்கிவந்த நாங்கள், (சென்னையில் ஒரு சிறிய அலுவலகம் உண்டு) திருச்சியிலும் எங்கள் அலுவலகத்தைத் திறக்கப் போகிறோம்.

நான் பின்பற்றும் இரண்டு விஷயங்களைத்தான் என் ஊழியர்களிடமும் அடிக்கடி சொல்வதுண்டு. எப்போதும் பாசிட்டிவாக எண்ணுங்கள். உங்களுக்கு எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும் என்பது அதில் ஒன்று. உங்கள் மகிழ்ச்சியை எப்போதும் மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்பது இன்னொன்று. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்'' சொல்லிமுடித்த ராம், அடுத்த சிகரத்தைத் தேடி நகர்ந்துகொண்டிருக்கிறார்.