Tuesday, December 16, 2008

சிகரத்தைத் தேடி-1

விமான நிலையத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கவேண்டும்... நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மெட்ரோ கூட்டத்துக்கு வந்து செல்ல வாய்ப்பான இடத்தில் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு ஐ.டி. நிறுவனத்துக்கு அடிப்படைத் தேவையாகச் சொல்வார்கள். ஆனால், அதெல்லாம் சும்மா என்று சொல்வதுபோல பாண்டிச்சேரியில் உட்கார்ந்துகொண்டு வெற்றிகரமாக ஐ.டி. கம்பெனியை நடத்திக்கொண்டிருக்கிறார் ராம் சுப்பிரமண்யா! பாண்டிச்சேரியில் இவர் நடத்தும் 'இன்டெக்ரா சாஃப்ட்வேர்' நிறுவனம், இ-பப்ளிஷிங் துறையில் உலக அளவில் 5-வது இடத்தைப் பிடித்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 5 ஊழியர்களுடன் ஆரம்பமான இந்த நிறுவனம், இன்று 1,100 ஊழியர்களுடன் 24 மணி நேரமும் ஆண்டு முழுக்க இயங்கி வருகிறது.

''தொழிலில் ஜெயிக்கத் தேவையான இடம் மூளைதான் சார்... அது சுறுசுறுப்பாக இருந்தால் எங்கே இருந்தாலும் ஜெயிக்கலாம்...'' என்று சின்னச் சிரிப்போடு சொன்ன ராமைப் பார்த்தால், ஜீரோவை உடைத்துக்கொண்டு சீறிக் கிளம்பிய ஹீரோவாகத்தான் தெரிகிறார்.
தன்னுடைய அட்சரத்தில் இருந்து ஆரம்பித்தார் ராம்.

''நான் பிறந்தது மதுராந்தகத்தில்... பாரம்பரியம் மிக்க குடும்பத்தில்..! ஊரார் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்கத்தில் என் பாட்டனார் 125 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய பள்ளியில்தான் நானும் ஆறாவது வரை படித்தேன். அதன்பிறகு, திருச்சியில் உள்ள 'ராமகிருஷ்ணா தபோவனம்' நடத்தும் பள்ளி, மதுரையில் சோழவந்தானுக்கு அருகில் உள்ள 'விவேகானந்தா கல்லூரி' என படிப்பு வளர்ந்தது. பின்பு 'அண்ணா பல்கலைக்கழக'த்தில் 'மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்' படித்தேன்.

அப்போதே சொந்தத் தொழில்தான் என் மனதில் இருந்தது. ஆனால், தொழிலுக்கு முன்அனுபவம் முக்கியம் என்பதால், ஒரு வேலையில் சேர்ந்தேன். அடிப்படை வேலைகள் முதல் நிர்வாகம் வரை அத்தனை விஷயங்களையும் அங்கு தெரிந்து கொண்டேன். படிப்படியாக புரமோஷன் என்னைத் தேடி வந்தது. பெங்களூருவில் ஒரு 'க்ரீன்ஃபீல்ட்' நிறுவனத்தைத் தொடங்க கம்பெனி சார்பில் என்னை அனுப்பினார்கள். 'க்ரீன்ஃபீல்ட்' நிறுவனம் என்பது லைசென்ஸ் பெறுவதில் ஆரம்பித்து, கட்டடம் எழுப்பி, ஆட்களைத் திரட்டி, வெற்றிகரமாக இயங்க வைப்பது. அந்த ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்தேன்.

கம்பெனிக்கு வேலை சிறப்பாக முடிந்த சந்தோஷம்... எனக்கு ஒரு தொழிலை நேர்த்தியுடன் தொடங்கும் அளவுக்கு திறமை இருப்பதைச் சோதித்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பு அது. அதையடுத்து பாண்டிச்சேரியில் இன்னொரு 'க்ரீன்ஃபீல்ட்' நிறுவனத்தைத் தொடங்க என்னை அனுப்பினார்கள். அதையும் செய்து முடித்தபோது, முழுமையான மன தைரியமும் ஒன்பது ஆண்டு வேலை அனுபவமும் என் கணக்கில் சேமிப்பாக நின்றது. கூடவே சொந்தத் தொழிலுக்குத் தோள்கொடுக்க முழுமனதோடு காத்திருந்தார் மனைவி அனுராதா.

என்ன தொழில் தொடங்கலாம் என்று விவாதித்தோம். குடும்பத் தொழிலான விவசாயம் தொடர்பான தொழிலா, பொறியியல் நிறுவனமா, அல்லது ஐ.டி. கம்பெனியா என்ற விவாதத்தின் முடிவில், வேகமான வளர்ச்சிக்கு ஐ.டி. கம்பெனிதான் சிறந்தது என்று தீர்மானமானது.
சரியான துறையைத் தேர்வு செய்துவிட்டாலே பாதி வெற்றி உறுதி என்பதை அதன்பின் அனுபவத்தில் உணர்ந்தேன். பாண்டிச்சேரியில் முதல் முதலாக கம்ப்யூட்டர் வாங்கி தட்டச்சு செய்துகொடுக்கும் (டி.டி.பி.) வேலையைச் செய்ய ஆரம்பித்தோம். அடுத்த சில மாதங்களிலேயே ஸ்கேனிங், பைண்டிங் என்று வேகமாக வளர ஆரம்பித்தோம். அந்தச் சமயத்தில் 'பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்' அஞ்சல்வழிக் கல்வியை ஆரம்பித்தது. குறுகியகாலத்தில் நிறைய புத்தகங்களைத் தயார் செய்யவேண்டிய அவசரம் அவர்களுக்கு. ஆனால், எங்களுக்கோ அது ஒரு வரம்! எங்களால் முடிந்த அளவுக்கு இரவு, பகல் என்று பார்க்காமல் அவர்கள் சொன்ன வேலையைத் தரமாகச் செய்துகொடுத்தோம். நமக்கான வாய்ப்புகள் எப்போதும் எப்படியும் வரலாம். வரும்போது அதை கச்சிதமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் சமயத்தில் ஒரு சிங்கப்பூர் நிறுவனம் ஆர்டர் ஒன்றுக்காக ஆள் தேடுவதை அறிந்தோம். எங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி, அவர்களைச் சம்மதிக்க வைக்க பெரும் சிரமம் எடுத்துக் கொண்டோம். எங்கள் முயற்சி வீண்போகவில்லை. தனது புத்தகத்தைத் தயார் செய்துகொடுக்கும் வேலையை எங்களிடம் கொடுத்தது. அந்த ஆர்டரை மிகச் சிறப்பாகச் செய்துகொடுத்ததன் விளைவு, இன்றுவரை அந்த நிறுவனம் எங்களை விட்டு வேறு எங்கும் போகவில்லை! ஒரு வாடிக்கையாளர் நம்மிடம் வந்துவிட்டால், அவர்கள் நம்மைவிட்டு வேறு எங்கும் சென்றுவிடக்கூடாது. அதுதான் தொழிலில் முக்கியம்!
இந்தக் காலகட்டத்தில் இன்டர்நெட் என்பது எங்களுக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. 'டயல் அப்' முறையில்தான் வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். இந்த முறையில் எங்களுக்கு பல விதமான தொந்தரவுகள். அவசரமான நேரத்தில் 'டயல் அப்' மூலம் இன்டர்நெட்டுக்குள் போக வேண்டுமென்றால் லைன் கிடைக்காது. இதற்காக சிங்கப்பூரில் இருக்கும் இன்னொரு அலுவலகத்தின் இன்டர்நெட்டுடன் எங்கள் லைனை இணைத்து, இ-மெயிலை அங்கு டவுன் லோட் செய்து படிப்போம்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வெளிநாட்டுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் 'ஐ.எஸ்.டி.என்.' இணைப்புதான் என்பதை உணர்ந்து, பாண்டிச்சேரி தொலைபேசித் துறையை அணுகினோம். அவர்களால் எங்கள் தேவையையே புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படி ஒரு விண்ணப்பத்தோடு சென்ற முதல் ஆள் நாங்கள்தான்! பிறகு, சென்னைக்குச் சென்று போராடி அந்த இணைப்புக்கான ஏற்பாட்டைச் செய்து, பாண்டிச்சேரி தொலைபேசித்துறை மூலம் அதைப் பெற ஓராண்டு காலம் பிடித்தது.

ஆனால், பிரச்னைக்கான தீர்வு ஒன்றுதான் என்று தெரிந்துவிட்டால், அது கிடைக்கும்வரை பொறுமையாக இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்.

2000-த்துக்குப் பிறகு எங்களைத் தேடி ஆர்டர்கள் வந்து குவிய ஆரம்பித்தன. ஓரளவுக்குப் பெரிய நிறுவனமாக ஆகிவிட்டோம். முதலில் ஒரு சிறிய வீட்டில் தொடங்கிய எங்கள் அலுவலகம், மூன்று வீதிகளில் உள்ள அத்தனை வீடுகளிலும் நடக்கும் அளவுக்கு வளர ஆரம்பித்தது. வளர்ச்சியின் வேகம் அதிகமானபோது 'சென்னைக்குப் போய்விட்டால் இன்னும் வேகமாக முன்னேறமுடியும்' என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், நான் 'டயர்-2 சிட்டி' என்று அழைக்கப்படுகிற பாண்டிச்சேரியிலேயே எங்கள் நிறுவனத்தை நடத்துவது என்று முடிவெடுத்தேன்!

பெரிய நகரங்கள் அளவுக்குப் போட்டி இருக்காது. உற்பத்திச் செலவு குறைவாக இருக்கும் என்றெல்லாம் தொழில் ரீதியான லாபங்கள் இருந்தாலும், சின்ன ஊரில் இருந்துகொண்டு சாதிப்பது என்ற சவாலை நான் விரும்பினேன். அதுதான் முக்கியமான காரணம். நமக்கான சவால்களை நாமே உருவாக்கிக்கொண்டு ஜெயிக்கவேண்டும். சவால்கள் இல்லாத தொழில் சுவாரஸ்யமானதாக இருக்காது.

பாண்டியிலேயே எங்கள் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தபிறகு அதில் உள்ள பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதல் சிக்கல், எங்களுக்கு ஆர்டர் கொடுக்க நினைக்கும் நிறுவனங்களின் உயரதிகாரிகள் எங்கள் நிறுவனத்துக்கு வருவதில் காட்டிய தயக்கம். 'சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரில் வெகுதூரம் வரவேண்டுமா..? இந்தியாவில் சாலைப் பயணம் ரிஸ்க்கான விஷயமாச்சே...' என்றெல்லாம் தயங்கினார்கள்! ஆனால், பேசிச் சம்மதிக்கவைத்து, வசதியான வெளிநாட்டு கார்களை வாடகைக்குப் பிடித்து அவர்களை அழைத்து வந்தோம். என் நிறுவனத்தை ஒருமுறை நேரில் பார்த்தால் எங்கள் மீதான நம்பிக்கை கூடும் என்று நான் நம்பினேன். அது நடக்கவும் செய்தது.

அடுத்த சிக்கல், எங்கள் நிறுவனத்துக்கான ஊழியர்களைத் தேடுவதில் வந்தது. வேறு நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்களை வைத்து வேலை வாங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. அதனால் எங்கள் ஊழியர்களை நாங்களே உருவாக்குவது என்று முடிவெடுத்தோம். திறமையானவர்களைத் தேடி, பயிற்சி கொடுத்து, எங்கள் நிறுவனத்தில் பணி அமர்த்தினோம். சிக்கல்களைக் கண்டு பயந்துவிடாமல், அதை எப்படி எதிர்கொள்வது என்ற வழியைத் தேடினால் தீர்வு எளிதாகக் கிடைக்கும்.

கடந்த 14 ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததன் விளைவு, உலக அளவில் பதிப்புத் துறையில் முதல் 10 இடத்தைப் பெற்றுள்ள புத்தக நிறுவனங்கள் எங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

எங்கள் ஊழியர்களிடம் நாங்கள் இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் வலியுறுத்துகிறோம். ஒன்று, தரம். மற்றொன்று, குறித்த நேரத்தில் வேலையை முடித்துக்கொடுப்பது. இ-பப்ளிஷிங் துறையில் நாங்கள் உலக அளவில் 5-வது இடத்தில் தொடர்ந்து இருக்கக் காரணம் இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே. நாங்கள் செய்துகொடுக்கும் வேலையில் ஒரு சிறிய தவறுகூட இருந்துவிடக்கூடாது என்பதில் நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் கவனமாக இருக்கிறோம். தவறுகள் மனிதக் கண்களுக்குத் தப்பிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக பல சாஃப்ட்வேர்களையும் உருவாக்கி இருக்கிறோம்

அடுத்து, நேரந்தவறாமை. இதற்குத் திட்டமிடுதல் மிகவும் அவசியம். ஒரு வேலை என்றைக்கு முடித்துக் கொடுக்கவேண்டுமோ, அதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடித்துக் கொடுக்கிற மாதிரி திட்டமிடுகிறோம். இதனால் எதிர்பாராமல் ஏதாவது ஒன்று நடந்தாலும் குறித்த நேரத்தில் எங்களால் அந்த வேலையைச் செய்து கொடுத்துவிட முடிகிறது. தரத்திலும் நேரத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் உறுதியாக இருந்தால் ஜெயிப்பது நிச்சயம். நேரம் தவறினால் நல்ல எதிர்காலத்தைத் தவற விட்டுவிடுவோம்.

இப்போது எங்கள் நிறுவனம் 'இ-பப்ளிஷிங்'கில் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது. 2013-ல் எங்கள் நிறுவனம்தான் 'இ-பப்ளிஷிங்' துறையில் முதல் இடத்தில் இருக்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம். அடுத்த ஆண்டில் 100 கோடி ரூபாய்க்குக் குறையாமல் எங்கள் டேர்ன் ஓவர் இருக்கவேண்டும் என்பது எங்கள் இலக்கு. அமெரிக்காவில் உள்ள ஒரு 'இ-பப்ளிஷிங்' நிறுவனத்தை நாங்கள் ஏற்கெனவே வாங்கிவிட்டோம்! கூடிய விரைவில் இன்னுமொரு நிறுவனத்தையும் வாங்கப் போகிறோம். இதுநாள் வரை பாண்டிச்சேரியில் மட்டுமே இயங்கிவந்த நாங்கள், (சென்னையில் ஒரு சிறிய அலுவலகம் உண்டு) திருச்சியிலும் எங்கள் அலுவலகத்தைத் திறக்கப் போகிறோம்.

நான் பின்பற்றும் இரண்டு விஷயங்களைத்தான் என் ஊழியர்களிடமும் அடிக்கடி சொல்வதுண்டு. எப்போதும் பாசிட்டிவாக எண்ணுங்கள். உங்களுக்கு எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும் என்பது அதில் ஒன்று. உங்கள் மகிழ்ச்சியை எப்போதும் மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்பது இன்னொன்று. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்'' சொல்லிமுடித்த ராம், அடுத்த சிகரத்தைத் தேடி நகர்ந்துகொண்டிருக்கிறார்.

No comments: