Thursday, December 18, 2008

Love ur child-1

என்ன நண்பர்களே... உங்கள் பிள்ளைகள் என்ன மதிப்பெண் வாங்கினார்கள்? நூறு சதவிகிதம் என்றால் உங்கள் விலாசத்தை உடனே அனுப்பி வையுங்கள்... நீங்கள்தான் அடுத்த அத்தியாயத்துக்கு அனுபவத்தைச் சொல்லப்போகும் ஆசான்!

60%க்கு மேல் எடுத்து முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தீர்கள் என்றால் கொஞ்சம் பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுங்கள்... நூறு வாங்குவார்கள். சில விஷயங்களை நீங்களே கூட பிள்ளைகளுக்கு எதற்கு குடும்பச் சுமை என்று மறைத்திருக்கலாம்... உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். குழந்தைகள் ஹாஸ்டலில் இருந்தால்கூட முக்கியமான முடிவுகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள்.


முதல் வகுப்புக்குக் கீழே என்றால் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்... பிள்ளைகள் இல்லை, நீங்கள்! வெளிப்படையாகப் பணம் தொடர்பான விஷயங்களைப் பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்களே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்வார்கள்.

பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டிய அடுத்த பாடம், பணத்தின் மீது அவர்களுக்குப் பிடிப்பு வர வைக்கவேண்டும் என்பதுதான்! தூங்கும்போது தலையணைக்கு அடியில் பணக் கட்டுகளை வைத்துக்கொண்டு தூங்கும் அளவுக்கு ஆசையைத் தூண்டவேண்டும் என்று சொல்லவில்லை. பணம் சம்பாதிப்பதன் தேவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.

'டிரேட்' என்றொரு விளையாட்டு இருக்கிறது. குழந்தைகளை அந்த விளையாட்டுக்குப் பழக்கினால் உற்சாகம் தானாகவே பொங்கும். நான்கு பேர் விளையாடினால், ஆளுக்குக் கொஞ்சம் பணத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும். மீதிப் பணத்தை பேங்க்கில் வைத்துவிட வேண்டும். இப்போது தாயக்கட்டைகளை உருட்டி அதில் விழும் எண்களுக்கு ஏற்ப, நம் காய்களை நகர்த்த வேண்டும். அந்தக் காய் எந்தக் கட்டத்தில் நிற்கிறதோ, அந்தக் கட்டத்தை நாம் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

அதில் உள்ள விலையைக் கொடுத்து அதற்கான உரிமையை வாங்கிவிட்டால், அதன்பிறகு அந்தக் கட்டத்துக்கு யார் வந்தாலும் நமக்கு வாடகை கொடுப்பார்கள். வருமானம் கிடைக்கும். ஒரே வண்ணங்களில் நாலைந்து இடங்களை வாங்கிவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் வீடு கட்டலாம். அதற்குத் தனியாக கூடுதல் வாடகை வசூலித்துக் கொள்ளலாம்.

இந்த விளையாட்டு மெதுவாக உள்ளுக்குள் இறங்கிவிட்டால் பணம் பற்றிய சிந்தனை பெருகத் தொடங்கும். 'நான் இத்தனை கட்டங்களை விலைக்கு வாங்கினேன்... இத்தனை வீடுகளைக் கட்டினேன்' என்றெல்லாம் பேசிக்கொள்ளத் தொடங்குவார்கள். அதோடு, எந்தக் கட்டத்தில் வீடு கட்டினால் லாபம் அதிகமாகக் கிடைக்கும்... எந்தக் கட்டத்தை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து, வியர்வை சிந்தி உழைத்த பணத்தைச் செலவழிப்பதற்கு நிகராக திட்டம் போடத் தொடங்குவார்கள். அதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் தன் மகனின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா... 'டி.சி.எஸ்.' நிறுவனத்தின் நூறு பங்குகள்..! அதற்கு சில மாதங்களுக்கு முன் மகளுக்கு பிறந்தநாள் வந்தபோது 'இன்ஃபோசிஸ்' பங்குகளை வாங்கி பரிசளித்தார். குழந்தைகள் இருவரும் தினமும் பேப்பர் வந்தவுடன் தங்கள் பங்குகள் என்ன விலையேறியிருக்கிறது என்பதை ஆர்வமாகப் பார்க்கிறார்கள். நான் அவர்கள் வீட்டுக்குப் போனால் தங்கள் பங்கு உள்ள கம்பெனி பற்றிய தகவல்களை விசாரிக்கிறார்கள்.

''இன்னும் கொஞ்சநாட்கள்தான்... இந்த ருசி பிடித்துவிட்டால் பிறகு தாங்களே முதலீடு பற்றித் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவார்கள்...'' என்று நண்பர் பெருமையோடு சொன்னார்.

உண்மைதான்... நான் அமெரிக்காவில் இருந்த சமயம், அங்கிருந்த நண்பர் தன் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு கம்பெனியின் பங்கை வாங்கிக் கொடுத்தார். அப்போது அதன் மதிப்பு நூறு டாலர். அந்தப் பெண், படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லும்போது அந்தப் பங்குகளை விற்று கல்லூரி ஃபீஸ் கட்டிவிட்டாள். அப்போது அதன் மதிப்பு 36,000 டாலர்! கேக், டிரஸ், பார்ட்டி, சினிமா எல்லாம் ஒருநாள் கொண்டாட்டம்தான்... ஆனால், என் படிப்புக்குத் தேவையான பணத்தை நானே திரட்டிக் கொண்டேன் என்று சொல்வது எத்தனை கம்பீரமாக இருக்கும்! பணத்தைக் காதலிக்கும் மனப்பக்குவம் வந்துட்டால், அது சாத்தியம்தானே!

பிள்ளைகளுக்கு பணத்தின் மீது காதலை உண்டாக்குங்கள்... அவர்கள் ரொம்பவே அக்கறையோடு பணத்தைப் பார்த்துக்கொள்வார்கள். அதற்கு அவர்களோடு கொஞ்சம் ஒட்டுதலாக இருந்து, கற்றுக்கொடுங்கள்... சேமிப்பு பற்றியும் முதலீடு பற்றியும் சின்னச் சின்ன உதாரணங்களோடு விளக்கிச் சொல்லுங்கள். அவர்களுக்குப் பரிசு கொடுக்கும் சூழல் வந்தால் அதைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.

இதோ அடுத்த எக்ஸர்சைஸ்...

இந்தமுறை தேர்வு உங்களுக்குத்தான்..!



இது உங்களுக்கான தேர்வு... ஒட்டுதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நீங்களே மார்க் போட்டு தெரிந்துகொள்ளுங்கள்... இன்னும் சில செய்திகளோடு...

No comments: