Tuesday, December 16, 2008

சிகரத்தைத் தேடி-3(சீதாராமன். CEO of தோஹா வங்கி)

''என்னுடைய வாழ்க்கை குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது பிரயோஜனமா இருக்கும்னா ஒளிவுமறைவு இல்லாமல் அதைச் சத்தம்போட்டுச் சொல்றதில் எனக்கு எந்த வெட்கமும் கிடையாது...'' என்று கம்பீரமாக நிமிர்ந்தபடி சொல்கிறார் சீதாராமன். கண்ணை உறுத்தாத கறுப்பு வண்ண கோட், சூட்டில் இருந்த சீதாராமன், பார்ட்டிகளின்போது அணியக் கூடிய கழுத்தை இறுக்கும் 'பவ்' டை அணிந்திருந்தார்.

''யெஸ்... வாழ்க்கையை நான் கொண்டாட்டமாத்தான் பார்க்கிறேன்... அதனால்

தான் எப்பவுமே பார்ட்டிக்கான டிரஸ்தான் போடுறேன். ரொம்ப அஃபீஷியலான கோட், சூட், நீளமான டை எல்லாம் நான் போடுறதில்லை'' என்று தான் அணியும் உடைக்குள் கூட ஒரு தத்துவத்தை ஒளித்து வைத்திருக்கிறார்.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சாஃப்ட்வேர் போன்ற துறைகளில்தான் தமிழர்கள் கொடிநாட்டுவார்கள் என்று நினைக்க வேண்டாம். வளைகுடா நாடு ஒன்றின் முக்கியமான வங்கியான தோஹா வங்கியின் தலைமைப் பதவிக்குக் கூட ஒரு தமிழர் வரமுடியும் என்பதை நிருபித்திருக்கிறார் சீதாராமன். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.


''வறுமை எனக்குக் கிடைச்ச வரம். தஞ்சாவூருக்குப் பக்கத்தில் உள்ள தரங்கம்பாடியில் பிறந்த எனக்கு, பத்து வயதுவரை எந்தச் சிரமமும் இல்லை. தமிழ்நாடு அரசியலையே புரட்டிப் போட்ட இந்தி எதிர்ப்பு என் குடும்பத்தையும் சிதைச்சுடுச்சு. சமஸ்கிருதம் மற்றும் இந்தி கற்றுக் கொடுக்கும் வேலை பார்த்த என் அப்பாவுக்கு இந்தி எதிர்ப்பால் வேலை பறிபோனது!

இந்தி தவிர, வேறெதையும் சிந்திச்சே பார்க்காத என் தந்தை, வேலை தேடி மும்பைக்குப் போனார். நான்கு பிள்ளைகளையும் றெக்கைக்குள் குஞ்சுகளை அடைகாக்கும் கோழிபோல என் தாய் தாங்கிக் கொண்டார். என் தந்தை அனுப்பும் சொற்ப பணத்தில் எங்களை சொர்க்கத்தில் வைத்துப் பார்த்துக்கொண்டார் என் தாயார்.

அப்பாவால் எவ்வளவுதான் அனுப்பிவிட முடியும்! அம்மாவையும் சேர்த்து வீட்டில் ஐந்து வயிறுகள்... அவருகிட்டே இருந்தது ரெண்டு கைகள்தானே... நானும் அண்ணனும் மயிலாடுதுறையில் உள்ள ஹாஸ்டலில் போய் தங்கிப் படிச்சோம். இலவச தங்குமிடம், சாப்பாடுன்னு எங்க ரெண்டு பேர் செலவாவது குறையுமே!

எங்கம்மா எனக்குச் சொல்லித் தந்தது ஒரே ஒரு விஷயம்தான். 'என்ன ஆனாலும் சரி, படிப்புதான் நமக்கு துணை நிக்கும். அதை மட்டும் மனசிலே வெச்சுக்கோ'னு அன்னிக்கு அவங்க சொன்னதை இன்னிக்கு அனுபவப்பூர்வமா உணர்றேன். எனக்குக் கீழே அமெரிக்காகாரர், இங்கிலாந்துகாரர், ஜப்பான்காரர்னு பல நாட்டு ஆட்கள் வேலை பார்க்கிறாங்கன்னா அதுக்குக் கை கொடுத்தது என் படிப்புதானே!'' என்று சொல்லும் சீதாராமனின் தமிழில் தஞ்சாவூர் மணக்கிறது.

''படிக்கிற காலத்தில் வேற கவனம் எதுவுமில்லை. இருந்தாலும் அதுவும் படிப்புக்கு, குடும்பத்துக்கு உதவியா இருக்குமான்னுதான் பார்ப்பேன். புது புத்தகங்கள் வாங்க வசதி கிடையாது. முந்தின வருஷம் முடிச்சவங்ககிட்டே இருந்து புத்தகங்களை வாங்குவேன். அதுக்கும் பணம் கொடுக்க வழிகிடையாது. அவங்களுக்கு கணக்கு, இங்கிலீஷ் மாதிரி சப்ஜெக்ட்டுகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பேன். என்னைவிட பெரிய கிளாஸ் பசங்களுக்கு டியூஷன் எடுத்து காசு சேர்த்து படிப்புச் செலவுகளைச் சமாளிப்பேன்.

இன்னிக்கு உலகம் முழுக்க செமினார், கான்ஃபரன்ஸூனு பேசிக்கிட்டிருக்கேன். அதுக்கான விதை பள்ளிக்கூட காலத்திலேயே விழுந்திடுச்சு. திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் 'சூரியகாந்தி'னு ஒரு நிகழ்ச்சி. அதுல பேசினா 55 ரூபாய் பணம் கிடைக்கும். அதுக்காக அடிக்கடி ஓடிப்போய் பேசிட்டு வருவேன். அந்தக் காசு குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் உதவியா இருக்குமே!'' என்று சீதாராமன் சொல்லும்போது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தாயின் கண்களில் ஈரம் கசிகிறது.

மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பு, தஞ்சாவூரில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.காம்-னு படிப்பு முழுக்கவே அரசாங்க உதவித் தொகையில்தான். கல்லூரியையும் முடிச்சுட்டு சி.ஏ. படிச்சேன். முடிச்ச கையோடு அப்பாவுக்குத் துணையா மும்பைக்கு போயிட்டேன். அங்கே 'பிரைஸ் வாட்டர் ஹவுஸ்'னு ஒரு ஆடிட் கம்பெனியில் வேலையில் சேர்ந்தேன். அப்போதான் மொத்தக் குடும்பமும் ஒரே இடத்தில் இருந்தா செலவு கட்டுக்குள் இருக்கும்னு தோணுச்சு. எல்லோரையும் மும்பைக்குக் கூட்டிட்டுப் போயிட்டோம். அந்தக் காலகட்டத்தில்தான் தங்கைக்கு திருமணம் முடிச்சு வெச்சோம்.



ஆனால், ரூபாயில் சம்பாதிச்சு சேர்த்து எங்க குடும்பத்தை மேலே கொண்டு வர ரொம்ப காலமாகும்னு புரிஞ்சது. வெளிநாட்டுக்குப் போனா நல்ல சம்பளம் கிடைக்குமேனு மஸ்கட்டில் ஒரு ஆடிட்டிங் கம்பெனிக்கு ஓடினேன். அதன்பிறகு வாழ்க்கையில் எல்லாமே வசந்த காலம்தான். அடுத்தடுத்து சில வங்கிகளில் வேலை பார்த்து இப்போது தோஹாவில் வந்து உட்கார்ந்திருக்கேன்'' என்ற சீதாராமன், தன் மனைவி குழந்தைகளைப் பற்றிச் சொன்னார்.

''என் குடும்பச் சூழல் தெரிஞ்ச பொண்ணா வேண்டும்னு நினைச்சேன். அதுக்கு ஏத்தமாதிரி அமைஞ்சாங்க. திருக்காட்டுபள்ளிதான் சொந்த ஊருன்னாலும் மனைவி பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பைதான். ரெண்டு பொண்ணுங்க... பெரியவள் கத்தாரில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். சின்னவள் பத்தாவது படிக்கிறார். 'இவ்ளோ கஷ்டப்பட்டியாப்பா'னு கதை போல என் வாழ்க்கையைக் கேட்டுப்பாங்க. அவங்க சொன்ன வார்த்தைகள்தான் நான் முதலில் சொன்னது, 'வறுமை ஒரு வரம்!'

எங்கப்பா மும்பையில் இருந்த காலத்தில் ஊருக்கு அவரால் அனுப்ப முடிந்த பணம் சில நூறுகள்தான். ஆனால், இன்றைக்கு எங்கள் குடும்ப வருமானம் எங்கேயோ இருக்குது. காலமாற்றங்கறதை இப்படித்தான் நான் பார்க்கிறேன். எங்களுக்காக தங்களைக் கரைச்சுக்கிட்டு வாழ்ந்த அப்பாவையும் அம்மாவையும் நாங்க பக்கத்துலயே வெச்சுக்கணும்னு ஆசைப்படுறோம். அப்பா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் காலமாகிட்டாரு. அம்மா அண்ணனோடு மும்பையில் கொஞ்சநாள், தம்பியோடு சென்னையில் கொஞ்சநாள், என்னோடு கொஞ்சநாள்னு பாசத்தைப் பகிர்ந்து கொடுத்துக்கிட்டிருக்காங்க. இதுதான் என் வாழ்க்கைச் சுருக்கம்'' என்று தெளிந்த நீரோடையைக் கடக்க கைப்பிடித்துக் கூட்டிச் செல்வதுபோலச் சொல்லிக்கொண்டே போனார்.

மிக மிக உயரத்துக்குப் போய்விட்டாலும் சீதாராமன் வேர்களை மறந்துவிடவில்லை.

''நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு உதவுறதுக்கு அறக்கட்டளை மூலமா உதவிகள் பண்றேன். கண்பார்வை தெரியாத குழந்தைகள் 40 பேருக்கு உதவி செய்றேன். உதவுறேன்னு சொன்னா போதும்... யாருக்கு எவ்வளவுனு பட்டியல் வேண்டாம்... அது தேவையில்லை. என்னைப் பொறுத்த அளவில் எங்கேயோ ஒரு மூலையில் எதோ ஒரு சீதாராமன் வளர வழியில்லாமல் திகைத்து நின்னுடக் கூடாது. அவன் என்னைத் தேடி வரணும்னு இல்லை. நான் அவனைப் போய்ச் சேரணும்னுதான் யோசிக்கிறேன். இன்னும் சொல்லப் போனா, இந்தியாவைவிட மிகவும் தேவைப்படுற இன்னும் சில நாடுகளுக்கு நான் அதிகமா உதவி பண்றேன்'' என்றார்.

புறப்படும் நேரத்தில் சீதாராமன் சொன்ன வார்த்தைகள் உறுதியான குரலில் கூடவே வந்தன.

''இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உலகில் பல இடங்களில் உயர்ந்த நிலைகளில் இருக்காங்கனு சொன்னா, அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றது கடின உழைப்புதான். அவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கற அனுபவங்கள்தான் அவர்கள் முக்கியமான பல முடிவுகளை எடுக்கறதுக்கு உதவி செய்யுது. இன்னிக்கு உலக அளவில் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை நிர்வகிக்கும்போது பல முடிவுகளை எடுக்க நான் துணைக்கு அழைப்பது வறுமையான காலத்தில் என் அம்மா எடுத்த முடிவுகளைத்தான்! எல்லோருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கும். அதை கடைசிவரையில் மறக்காமல் இருக்கவேண்டும். பிறருக்கு மறைக்காமல் சொல்லவும் வேண்டும்''

சீதாராமன் சொல்லியிருக்கிறார்... பலருக்குத் தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு!

No comments: