வெறும் கையால் முழம் போடமுடியாது என்பார்கள். ஆனால் முழம் அல்ல, முழுக் கோபுரத்தையே கட்டி எழுப்பியிருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த வி.பழனிச்சாமி. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவருடைய விறுவிறு வளர்ச்சி ஒரு மேஜிக் போலத்தான் தெரியும். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் அவரது அயராத உழைப்பு அத்தனை சாதாரணமானதல்ல...
திருப்பூருக்கு வேலை தேடிப் போகிறவர்களில் பத்தில் ஆறு பேராவது ஜே.வி. குரூப் நிறுவனத்தின் கதவைத்தான் முதலில் தட்டுகிறார்கள். ஆயிரம் ரூபாயை முதலீடாகப் போட்டு, ஒரு தொழிலை ஆரம்பித்து, அதிலிருந்து ஆண்டுக்கு 200 கோடி ரூபாயை எடுக்கும் அற்புதத்தைச் சாதித்துக் கொண்டிருக்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வி.பழனிச்சாமி.
அனுபவத்தை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்ட பழனிச்சாமியின் வாழ்க்கை கதை முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு பாடம்தான்! விளம்பரம் என்றாலே மைல் தூரம் ஒதுங்கி நிற்கும் அவர், நாணயம் விகடன் வாசகர்களுக்காக, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்காக, நாளைய தொழிலதிபர்களுக்காக தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
''நான் பொறந்தது திருப்பூர்லயிருந்து கோவைக்கு போற ரூட்ல இருக்கும் முருகம்பாளையம் கிராமத்துலதான். என்னோட அப்பா விநாயகப்ப கவுண்டர் ரயில்வேயில வொர்க் பண்ணாருங்க! பக்கத்து கிராமமான வஞ்சிபாளையத்தில உள்ள ஸ்கூல்லதான் 8-ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அதுக்கப்புறமா அப்பா வேலை காரணமா திருப்பூருக்கு வந்துட்டோம்.
திருப்பூருக்கு வந்தபின்னாடி மேல படிக்கோணும்ங்கிற நினைப்பைவிட வேலைக்குப் போய் சம்பாதிக்கோணும்ங்கிற ஆசைதாங்க அதிகமா இருந்துச்சு. என்னோட அண்ணன் முத்துசாமி ஏற்கெனவே ஒரு பனியன் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டிருந்தாருங்க. அதைப்பாத்து நானும் ஒரு பனியன் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். சம்பளம்னு பாத்தா ஒரு நாளைக்கு மூணு ரூபாய்ங்க!
பனியன் கம்பெனியில வேலை பார்த்தாலும், நாம்பளும் எப்படியாவது ஒரு கம்பெனியை ஆரம்பிச்சிப் போடோணும்ங்கிற நெனைப்பு மனசை அரிச்சிக்கிட்டே இருந்துச்சுங்க. அப்பவே முடிவு பண்ணிட்டேன்... ஆரம்பிச்சா பனியன் கம்பெனிதான் ஆரம்பிக்கோணும்னு! கிட்டத்தட்ட நாலு வருஷம் பனியன் கம்பெனியில வேலை பார்த்தேன்.
பணத்தைவிட, படிப்பைவிட, அனுபவம்ங்கிற பாடத்தை படிச்சிருந்தாதான் தான் ஆரம்பிக்கப் போற தொழில்ல ஒருத்தர் ஜெயிக்க முடியும்ங்கிறது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை.
நாலு வருஷ காலம் நல்ல அனுபவம் கிடைச்சபிறகு நானும் அண்ணனும் கூட்டாச் சேந்து சொந்தமா தொழில் தொடங்க முடிவு செஞ்சோம்ங்க. வலப்பையில வெறும் ஆயிரம் ரூபாயை வெச்சுக்கிட்டு பழைய தையல் மெஷின் ஒண்ணை வாங்கினோம். பெரிய ஃபேக்டரிகள்ல வெட்டினது போக கிடைக்கிற 'பிட்' துணிகளை வாங்கி, அதுல அழகழகா டிரஸ் தைச்சு கடைகளுக்கு கொடுக்க ஆரம்பிச்சோம். சின்ன அளவுல நடந்த இந்தத் தொழில் மூலமாதான் பிஸினஸ்னா என்னனு தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு.
முதல் முயற்சியில எங்களுக்குக் கிடைச்ச வெற்றி, எங்களை அடுத்தகட்டத்தை நோக்கி நகர வச்சுதுங்க. 1976-ல கொஞ்சம் பெரிய அளவுல ஒரு பனியன் தொழிற்சாலையை ஆரம்பிச்சோம். 'ஜெயவர்மா நிட்டர்ஸ்'னு அதுக்குப் பெயர் வச்சோம். இந்த முறையும் எங்களுக்குக் கிடைச்சது வெற்றிதான்!
வெளிஸ்டேட்டுக்குப் போய் வியாபாரம் செய்யணும்னா இந்தி தெரிஞ்சா நல்லாயிருக்கும். அதனால கொஞ்சம் கொஞ்சமா இந்தி பேச முதல்ல கத்துக்கிட்டேன். அவங்க மொழியில நான் தட்டுத் தடுமாறிப் பேசினாலும் அது அவங்களுக்கு என் மேல பிரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துச்சு. அதனால தொழிலை மத்த மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த முடிஞ்சுச்சு. மெள்ள மெள்ள எங்க நிறுவனமும் திருப்பூர்ல உள்ள முக்கியமான நிறுவனங்கள்ல ஒண்ணா வளர ஆரம்பிச்சுது.
இந்தச் சமயத்துலதான் இன்னொரு விஷயத்தையும் நான் கவனிச்சேங்க. நாங்க தயாரிக்கிற ஒரு பொருளுக்குத் தேவையான முக்கியமான இன்னொரு பொருளை வேற யார்கிட்டயோ வாங்கவேண்டிய கட்டாயத்துல இருக்கோம்ங்கிறதைக் கவனிச்சேன். உதாரணமா, நாங்க ஜட்டி தயாரிக்கிறோம்னா அதுக்கு முக்கியமா தேவைப்படற எலாஸ்டிக்கை வேற யார்கிட்டயோ இருந்துதான் வாங்கிக்கிட்டிருந்தோம். இதனால லாபமும் குறைவாதான் கிடைச்சுது. அதுமட்டுமில்ல, இன்னொருத்தர் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை வேற! ஏன் அதை நாம்பளே தயாரிச்சா என்னன்னு யோசிச்சு அதுக்கான மெஷின்களை வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செஞ்சு நாங்களே எலாஸ்டிக் தயாரிக்க ஆரம்பிச்சோம்.
இந்த மாதிரி நமக்குத் தேவையானதை நாமே தயாரிச்சுக்கிடறதை 'பேக்வேர்டு இன்டக்ரேஷன்'னு சொல்வாங்க. ரிலையன்ஸ் அம்பானி இதைத்தான் செஞ்சார். ஆடை தயாரிக்கிறதுல ஆரம்பிச்சு, பெட்ரோல் சுத்திகரிப்பு வரைக்கும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் தன்னோட கிளைகளைப் பரப்பினதுக்கு முக்கியமான காரணம் இந்த டெக்னிக்தான்! அதுல முதல்படினு எலாஸ்டிக்கை உற்பத்தி செஞ்சதை சொல்லலாம்.
1987-ம் வருஷத்தோட பிற்பகுதியில நானும் என்னோட அண்ணனும் அதுவரைக்கும் செஞ்சு வந்த தொழிலை அவங்கவங்க சுயமா செய்ய ஆரம்பிச்சோம். எலாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துக்கு தாய் நிறுவனமான 'ஜெயவர்மா'ங்கிறதோட அடையாளமா 'ஜே.வி. டேப்ஸ்'னு என்று பெயர் வச்சு மார்க்கெட்டிங் செஞ்சேன். தொழிலும் நல்லபடியா வளர ஆரம்பிச்சுது. இப்போ 'நிட்டட் எலாஸ்டிக்' தயாரிப்புல இந்தியாவுல எங்க நிறுவனம்தான் முன்னணியில இருக்கு.
1987-ல் பாரீஸில் ஆடை ஏற்றுமதிக்கான ஒரு கண்காட்சி நடந்துச்சு. அதுக்கு நானும் போயிருந்தேன். அங்க போகும்போது கையோட நாங்க டிஸைன் செஞ்ச டிரஸ்கள் சிலதையும் எடுத்துக்கிட்டுப் போயிருந்தேன். கண்காட்சியை முழுக்கச் சுத்திப் பார்த்தபின்னாடி, ஐரோப்பிய நாட்டு மக்கள் என்ன மாதிரியான தரத்துல ஆடைகள் இருக்கோணும்னு எதிர்பார்க்கிறாங்க அப்படிங்கிறதை நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நான் கொண்டுபோயிருந்த டிரஸ்ஸூம் அந்தத் தரத்துக்கு குறையாம இருந்துச்சு. உடனே லண்டன்ல உள்ள சில கடைகளுக்குப் போய் இங்கிருந்து கொண்டுபோன டிரஸ்களைக் காட்டினேன். அவங்களுக்கு அது பிடிச்சுப் போயி, அப்பால அங்கயே ஆர்டர் கொடுத்துட்டாங்க. 1988-ல் ஆரம்பமான எங்களோட ஏற்றுமதி, மூணே வருஷத்துல உச்சத்தை எட்டுச்சு. 91-ம் வருஷம் திருப்பூர்ல பெரிய ஏற்றுமதி கம்பெனியா எங்க கம்பெனி மாறிடிச்சு.
நாங்க உற்பத்தி செய்யற ஆடைகள் தரமானதுனாலும் அதோட சாயத்துக்கு நிறம் மங்கவே மங்காதுனு எங்களால உத்தரவாதம் கொடுக்க முடியாம இருந்துச்சு. அதனால 1989-ல சொந்தமா ஒரு சாயத் தொழிற்சாலை ஆரம்பிச்சேன். இப்போ சாயத்துக்கு எங்களால நூறு சதவிகிதம் கேரன்டி சொல்ல முடியுது.
இப்படி 'பேக்வேர்டு இன்டக்ரேஷ'ன்ல ரெண்டு முக்கியமான விஷயங்களை செஞ்சு முடிச்சுட்டாலும், இன்னும் ஒரு விஷயம் மிச்சமிருந்துச்சு. அது நூல் உற்பத்தி!
97-ம் வருஷம் 'ஜெயவர்மா டெக்ஸ்டைல் மில்ஸ்'னு ஒரு ஆலையை ஆரம்பிச்சேன். இப்போ இன்னொரு நூற்பாலையும் ஆரம்பிச்சிருக்கோம்.
'பேக்வேர்டு இன்டக்ரேஷ'ன்ல இவ்வளவு செஞ்சபிறகும் போதும்னு என்னால இருக்க முடியலை. மில் நடக்கிறதுக்கு மின்சாரம் உயிர்நாடி மாதிரியானது. அதுமட்டுமில்ல மின்சாரத்துக்கான செலவும் ரொம்ப ஜாஸ்தி. அதனால திருநெல்வேலியில் உள்ள முப்பந்தலில் 9 காற்றாலைகளை ஆரம்பிச்சேன். அது மூலமா எனக்கு 7.5 மெகாவாட் மின்சாரம் இப்ப கிடைக்குது'' என்றவர் தனது அடுத்த இலக்குகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
எதிர்காலத்துல இன்னும் என்னென்ன புது தொழில்களை ஆரம்பிக்கலாம், மாற்றுத் தொழில்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்குது இதைப் பத்தியெல்லாம் யோசிச்சுக்கிட்டே இருக்கேன். இயற்கை வழி உற்பத்திப் பொருட்களுக்குத் தேவையும் நல்ல ஊக்கமும் எதிர்காலத்துல கிடைக்கும்ங்கிறது என்னோட எதிர்பார்ப்பு. அதனால இயற்கை வேளாண்மை சம்பந்தமாவும் விஷயங்களை சேகரிச்சுக்கிட்டிருக்கேன்'' என்றவர் தனது நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்களையும் தனது கோட்பாடுகளையும் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''எங்களோட தொழில்ல நாங்க சிறந்து விளங்கறதுக்கு முக்கியமான காரணங்கள் பலது இருக்கு. அதுல முதலிடம் ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும்தான். என்னோட கம்பெனில திறமை வாய்ந்தவங்களா அமைஞ்சது மிகப்பெரிய கொடுப்பினை.
அடுத்த முக்கியமான காரணம் வங்கியோட இருக்கற நட்பு. 76-ம் வருஷத்துல இருந்து ஒரே வங்கிதான். எக்காரணத்தைக் கொண்டும் நான் மாத்தினதே இல்லை. ஒரு தொழில்ல வெற்றிபெறணும்னு நினைக்கிறவங்க அடிக்கடி வங்கியை மாத்தக்கூடாதுங்கிறது என்னோட கருத்து!
மூணாவது முக்கியமான காரணம், எந்தக் காலத்திலும் தேவைக்கதிகமா கடன் வாங்காதது. புதுசா தொழில் தொடங்குறவங்ககூட தேவைப்படற பணத்துல 50 சதவிகிதத்தை மட்டுமே கடனா வாங்குங்க. உங்க தொழில் சின்னதா இருந்தாலும் பரவாயில்லை, குறைஞ்ச அளவிலேயே கடன் இருக்கிறது நல்லது'' என்று எல்லோரும் ஃபாலோ பண்ணவேண்டிய விஷயத்தைச் சொன்னவர், இன்னொரு முக்கியமான விஷயத்துக்கு வந்தார்...
''ஒரு தொழிலை நடத்துறவங்க அவங்க தொழிலை மாதிரியே அவங்களோட உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமா வச்சுக்கோணும். அதேமாதிரி திட்டமிடுறதுலயும் அதிக அக்கறை எடுத்துக்கோணும். அடுத்த அஞ்சு வருஷத்துல செய்யவேண்டியது என்ன? அடுத்த வருஷம் செஞ்சு முடிக்கவேண்டியது என்ன? அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? இன்னைக்குச் செய்ய வேண்டியது என்ன? இதையெல்லாம் பட்டியல் போட்டு, முக்கியமானதுகளுக்கு முன்னுரிமை கொடுத்து குறிச்சு வச்சுக்குவேன். அந்தக் குறிப்பு புத்தகம் எப்பவும் என்கிட்ட இருக்கும். இதையெல்லாம் கடைப்பிடிச்சா... அது நம்ம வெற்றிக்கு நிச்சயமா உதவும். இது என்னோட அனுபவப் பாடம்!''
தன் பிஸினஸ் வெற்றிக்கதையைச் சொல்லி முடிக்கும் பழனிச்சாமிக்கு இப்போது 53 வயது. புதிய புதிய வெற்றிகளை நோக்கி தினம் தினம் முன்னேறிக்கொண்டிருக்கும் பழனிச்சாமி, இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு ரோல் மாடல்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment