Tuesday, December 16, 2008

சிகரத்தைத் தேடி-5( கல்யாண-ராமன் CEO of'குளோபல் ஸ்காலர் டாட் காம்' )

கடாரம் கொண்ட சோழன்கள் காலம் முடிந்துவிட்டாலும் தமிழன் தனது வெற்றிக் கொடிகளை உலகெங்கும் பறக்க விட்டுக்கொண்டுதான் இருக்கிறான். என்ன, புஜ பலங்களைக் காண்பிக்க வேண்டியதில்லை என்பதால் இப்போது தங்களது மூளை பலத்தைக் காண்பித்து கொடி நாட்டிக்கொண்டிருக்கிறார்கள்! அப்படி உலக அளவில் பெரிய நிறுவனங்களில் உயரிய பொறுப்பை வகிக்கும் தமிழர்களை அடையாளம் காட்டும் முயற்சியாகவே இந்த 'தமிழ் சி.இ.ஓ.' தொடர் ஆரம்பமாகிறது...

மன்னார் கோவில்...

பெயரைச் சொன்னால் சட்டெனத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அப்படி ஒன்றும் பெரிய ஊரல்ல. ஆனால், அந்த ஊரில் விழுந்த விதை ஒன்று பிரமாண்ட விருட்சமாக இன்று விஸ்வரூபம் காட்டிக்கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவிலில் பிறந்த கல்யாணராமன் 'வால்மார்ட்', 'அமேசான்' போன்ற பெரிய பெரிய கம்பெனிகளில் மிக உயரிய பொறுப்புகளை வகித்து, இன்று 'குளோபல் ஸ்காலர் டாட் காம்' எனும் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராகவும் அதன் சி.இ.ஓ&வாகவும் அமெரிக்காவில் பதவி வகித்துவருகிறார்.

உயரத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் கல்யாண-ராமன் வாழ்க்கை ஒரு பாடம்தான். காட்டாற்று வெள்-ளங்கள் பல கடந்து சாதனை படைத்த தனது சரித்திரத்தை நாணயம் விகடன் வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''கிராமத்தில், 'தாயோடு பாசம் போச்சு, தந்தையோடு படிப்பு போச்சு' என்பார்கள். நான் ஒன்பதாவது படிக்-கும்போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்-தது. என் தந்தை எதிர்பாராதவிதமாக இறந்து-போய்விட்டார். தீராத குடிப்பழக்கம் அவரு-டைய உயிரைக் குடித்துவிட்டுத்தான் ஓய்ந்தது. குழந்-தைகள் நாங்கள் ஐந்து பேர். வெளியுலகம் தெரி-யாத, அதிகம் படிக்காத அம்மா... என்ன செய்வ-தென்றே தெரியவில்லை. அப்போதுதான் அம்மா துணிச்சலாக ஒரு முடிவெடுத்தார். 'யாரும் படிப்பை நிறுத்தவேண்டாம். யாரும் வேலைக்குப் போக வேண்டாம். எல்லோரும் படியுங்கள். நான் பார்த்துக்-கொள்கிறேன்' என்று சொல்லி வேலை செய்ய ஆரம்பித்தார். அவருக்குக் கிடைத்த சொற்ப தொகையை வைத்துதான் மொத்தக் குடும்பமே வயிற்றைக் கழுவவேண்டிய நிலை.



பல சமயங்களில் சாப்பிட எதுவுமே இருக்காது. சாப்பாட்டுத் தட்டை விற்று அரிசி வாங்கிச் சாப்-பிட்ட சம்பவங்கள்கூட உண்டு! பள்ளியில் மதிய உணவுத் திட்டம் என ஒன்று இல்லையென்றால் நாங்கள் உயிர் பிழைத்திருப்போமா என்பதுகூட சந்தேகம்தான். மதிய உணவு முடிந்து எல்லோருடைய தட்டையும் கழுவிக் கொடுத்தால் கூடுதலாக ஒரு சாப்பாடு கொடுப்பார்கள். அதைக்கொண்டுபோய் என் சகோதரிக்குக் கொடுப்பேன்.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் விக்கிர-மசிங்கபுரத்தில் உள்ள செயின்ட்மேரிஸ் பள்ளிக்-கூடத்தில்-தான் படித்தேன். ப்ளஸ் டூ முடித்தபோது எனக்கு இரண்டு இடங்களிலிருந்து சீட் கிடைத்தது. ஒன்று திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் சீட். அடுத்தது சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் இன்ஜினீயரிங் சீட். டாக்டராவது என்ற முடிவுடன் நெல்லைக்குக் கிளம்பியபோதுதான் அந்த முடிவை எடுத்தேன்...'' என்று சஸ்பென்ஸோடு நிறுத்திய கல்யாண-ராமன் சிறிய ஆசுவாசத்துக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்.

''அம்மாவிடம் நான் கேட்டேன்... 'அம்மா, நான் திருநெல்வேலியிலேயே பிறந்து, இங்கேயே படித்து, இங்கேயே டாக்டராகி, இங்கேயே வேலை பார்த்து என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா? அல்லது புதிய உலகைப் பார்க்கும் வகையில் சென்னைக்குப் போகட்டுமா' என்றேன். அம்மா கொஞ்சம்கூட தயங்காமல் சொன்னார், 'நீ சென்னைக்கே போ!'

சென்னையில் வந்து இறங்கியபோது எனக்கு யாரை-யும் தெரியாது. நண்பர்கள் கிடையாது, சொந்த பந்தங்கள் எதுவும் கிடையாது. அம்மா அனுப்-பும் பணத்தை வைத்துப் படித்தேன். எலெக்-டிரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு எடுத்-திருந்-தேன். ஒரு வழியாக படிப்பு முடிந்ததும் எனக்கு இரண்டு இடங்களில் வேலை கிடைத்தது. ஒன்று சென்னையில். இன்னொன்று மும்பையில். சென்-னையிலேயே முடங்கிவிடுவதா என்று மும்-பையைத் தேர்ந்தெடுத்தேன்!

மும்பையில் டி.சி.இ. கம்பெனியில் வேலை. மாதம் 2,800 ரூபாய் சம்பளம். மும்பைக்குப் போய்ச் சேர்ந்தபோதும் அங்கே நான் தனியாள்தான். யாரையும் எனக்குத் தெரியாது. முதல் நாள் வேலைக்குப் போனேன். இரண்டாவது நாளும் போனேன். சீஃப் கூப்பிட்டுக் கேட்டார், 'ஏன் இப்படி ஹவாய் செருப்புப் போட்டுக்கொண்டு தின-மும் இரும்புப் பெட்டியையும் தூக்கிக்கொண்டு ஆபீஸ் வருகி

றாய்?' என்று. அவரிடம் எனது நிலையை, குடும்பப் பின்னணியை போல்டாகச் சொன்-னேன். மற்றவர்களது அனுதாபத்தைப் பெறுவ-தல்ல எனது நோக்கம். என் நிலை எதுவோ அதை மறைக்காமல் சொல்லிவிடுவது என் குணம். 'எங்கே தங்கியிருக்கிறாய்?' என்று அவர் கேட்-டதும், 'தாதர் ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில்தான் தங்கி-யிருக்கிறேன்' என்று சொன்னேன். அதிர்ந்து போய்-விட்டார் அவர்.

உடனே எனக்கு தங்குவதற்கு ஆபீஸில் ஏற்பாடு செய்து தந்தார்கள். அங்கே சிறிதுகாலம் வேலை பார்த்தபிறகு, 'என்னால் மும்பையில் தாக்குப் பிடிக்க-முடியாது. இங்கே செலவு அதிகமாகிறது. அதனால் என்னை சென்னைக்கோ, பெங்களூருக்கோ மாற்றி-விடுங்கள்' என்று கேட்டேன். அவர்களும் சரி-யென்று பெங்களூருக்கு மாற்றினார்கள்.

பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த சில நாட்-களிலேயே எனக்கு ஒரு சவால். ஒரு வேலை சம்பந்-தமாக தேவைப்பட்ட புரோகிராமை எழுதித் தரமுடியுமா என்று எங்களிடம் கேட்டபோது சாஃப்ட்வேர் பற்றி எதுவுமே தெரியாத நான் தைரியமாக கையை உயர்த்தினேன். அது நிஜமாகவே ஒரு சவால்தான். மூன்றே மாதங்களில் 'சி' லேங்-வேஜைக் கற்றுக்கொண்டு அந்த புரோகிராமை வெற்றி-கரமாக எழுதி முடித்தேன்.

நான் எழுதிய புரோகிராம் நன்றாகவே வேலை செய்தது. என்னுடைய சீஃப் கூப்பிட்டு, 'உன்னை கன்ஃபர்ம் செய்கிறேன் வாழ்த்துக்கள்' என்றார். நான் பதிலுக்கு 'என் வேலையை ராஜினாமா செய்கி-றேன்' என்றேன்!'' இதைச் சொல்லிவிட்டு நம்மையும் ஒரு நிமிடம் உறைய வைத்துவிட்டு தொடர்ந்தார் கல்யாணராமன்.

''சார், 'நான் எழுதிய ஒரு புரோகிராமுக்கே இந்த வரவேற்பு என்றால் அந்தத் துறைக்கு நான் போனால் இன்னும் சாதிக்கமுடியும் வாய்ப்புகளும் அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் நான் சாஃப்ட்வேர் துறைக்குப் போகப்போகிறேன்' என்று சொன்னேன்.

பொதுவாக டாடா நிறுவனத்தில் ஒருவரை அவர்களது இன்னொரு நிறுவனத்துக்கு மாற்ற மாட்டார்கள். ஆனால், எனக்காக அந்த விதியை தளர்த்தி டி.சி.இ&லிருந்து டி.சி.எஸ்&க்கு மாற்றினார்கள். அப்போதுதான் எனக்கு அறிமுகமானார் என் மனைவி விஜயலட்சுமி. என்னைப் போல அல்ல அவர். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தபோதும் என்னை அவர் கரம்பிடிக்கச் சம்

மதித்தார். டி.சி.எஸ்&ஸிலிருந்து ஒரு கம்பெனிக்கு கான்ட்ராக்டில் என்னை லண்டனுக்கு அனுப்பினார்கள். அங்கேதான் எனக்கு ஒரு திருப்புமுனை காத்திருந்தது'' என்றவர் மேலும் தொடர்ந்தார்...

'என்னுடைய வேலை பிடித்துப் போகவும் அந்த கம்பெனி அதிபர் ஒரு நாள் என்னை அழைத்து, 'உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி' என்றவர், முதலில் நல்ல செய்தியைச் சொன்னார்... உன்னை எங்கள் நிறுவனத்திலேயே சேர்த்துக் கொள்கிறோம்... சம்பளம் மாதத்துக்கு லட்ச ரூபாய் என்றார். நான் கனவிலும் நினைத்துப் பார்த்திராத தொகை அது! நல்ல செய்திதானே சொல்கிறார். கெட்ட செய்தி என்ன என்று தெரியாமல் தவித்தேன். அவரே அதையும் சொன்னார்... 'உன்னுடைய இடத்தில் நான் இருந்தால் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்றார்!

'வேண்டாம் இந்த நாட்டில் இருந்தால் ஒரு அளவுக்கு மேலே உன்னை வளர விடமாட்டார்கள். நீ பேசாமல் அமெரிக்கா போய்விடு' என்றவர் நாலைந்து பத்திரிகைகளைத் தூக்கிப்போட்டு இதைப் பார்த்து வேலைக்கு விண்ணப்பம் போடு என்றார். மிரண்டுபோனேன் நான். இப்படியும் மனிதர்களா! 'தெய்வம் மனுஷ்ய ரூபேணே' என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை!

அவர் சொன்னபடியே விண்ணப்பம் போட்டேன். வேலை கிடைத்தது. அதுவும் எங்கே? புகழ்பெற்ற 'வால்மார்ட்' நிறுவனத்தில்! அதுவும் டைரக்டர் ஆஃப் டெக்னாலஜி வேலை. அதிலிருந்து அடுத்தடுத்து உயரங்களைத் தொட ஆரம்பித்தேன்... அடுத்து 'பிளாக்பஸ்டர்' நிறுவனத்துக்குச் சென்றேன். அடுத்து 'டிரக்ஸ்டோர் டாட் காம்' நிறுவனத்தில் சி.இ.ஓ&வாக உயர்ந்தேன். அடுத்து 'அமேசானி'ல் சீனியர் வைஸ் பிரசிடென்ட் பதவி! கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினேன்.


எங்கேயோ பிறந்த நான் இன்று எங்கேயோ இருக்றேன். ஆனால், என் உலகம் வீட்டைச் சுற்றிதான் இருக்கிறது. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துவிட்டேன். இன்று எனது அம்மா சகோதர சகோதரிகள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னவேண்டுமோ அதையெல்லாம் செய்யமுடிகிறது. கஷ்டப்பட்ட காலங்கள் கரையேறிவிட்டது'' என்றவர் தனது தற்போதைய வேலை குறித்தும் அவரது இலக்குகள் குறித்தும் பேசினார்.

''கல்வி சம்பந்தமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அதிகமாக இருக்கிறது. அதற்கு வடிகாலாக வந்து வாய்த்ததுதான் 'குளோபல் ஸ்காலர் டாட் காம்' வாய்ப்பு. ஆன்லைன் டியூட்டரிங் மூலம் உலகமெங்கும் உள்ள மாணவர்களின் தரத்தை உயர்த்தும் ஓர் உன்னதப் பணி. அதனால்தான் மாதம் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த வேலையை விட்டு விட்டு இதில் பங்குதாரராக இணைந்தேன்.

விரைவில் இந்தியாவிலும் இந்நிறுவனத்தை ஆரம்பிக்கப் போகிறோம். வேலை மூலமாக மட்டுமின்றி என் சகோதரர் மூலமாகவும் ஊரில் படிக்கக் கஷ்டப்படும் நூற்றுக்கணக்கானோர்களுக்கு உதவி செய்துவருகிறேன். பழசை மறக்கமுடியுமா என்ன!'' என்றார் கல்யாணராமன் பெருமிதத்-தோடு.

No comments: